/indian-express-tamil/media/media_files/2025/09/16/p-chidambaram-2-2025-09-16-20-01-53.jpg)
'இதில் கொண்டாடவதற்கு ஒன்றுமில்லை'.. இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
பிப்.6-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மத்திய அரசு இதனை ராஜதந்திர வெற்றியாகக் கொண்டாடினாலும், உண்மையில் இது ஒருதலைப்பட்சமான மற்றும் தெளிவற்ற ஒப்பந்தம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது வெற்றியா? ஏமாற்றமா? - ப.சிதம்பரம்
மத்திய அரசு கொண்டாடிவரும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கேள்விகளை எழுப்பி உள்ளார். இரு நாடுகளின் கூட்டறிக்கையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு (Framework) மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த ஒப்பந்தம் முற்றிலும் அமெரிக்காவிற்கு சாதகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை நீக்க அல்லது குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. பதிலுக்கு, இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களான ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு அமெரிக்கா 18% வரியை விதிக்கவுள்ளது. இந்த வரிகள் இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே நீக்கப்படும். எஃகு, செம்பு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க வரிகள் பெரும்பாலும் தொடரும். மேலும், அமெரிக்காவின் பிரிவு 232 கீழான வர்த்தக விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இப்படி ஒரு சூழலில் இதனை எப்படிக் கொண்டாட முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு - ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும். ஒருவேளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை வாங்கினால், அமெரிக்கா 25% அபராதத்தை மீண்டும் விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க விவசாயிகளுக்குப் பயன் தரும் வகையில் இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைப்பது, இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரிக்கும். இதனால் வாஷிங்டனுடனான இந்தியாவின் நீண்டகால வர்த்தக உபரி காணாமல் போய்விடும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவை துறை ஏற்றுமதியாளர்களின் எதிர்காலம் இந்த ஒப்பந்தத்தில் தெளிவற்ற நிலையில் (In limbo) விடப்பட்டுள்ளது. அனைத்து கட்டிப்பிடிப்புகளும் புகைப்படங்களும் எதற்கும் பயன்படவில்லை. 'நமஸ்தே ட்ரம்ப்' ஆதிக்கம் செலுத்திவிட்டது. நண்பன் இப்போது நண்பனாக இல்லை என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டு உள்ளார்.
இருப்பினும், இந்தியா - அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கையில், இது பரந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய முக்கிய அடி என்றும், எரிசக்தி, விமான பாகங்கள், தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களை அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 2 2026
source https://tamil.indianexpress.com/india/how-is-this-a-matter-of-celebration-chidambaram-slams-india-us-trade-deal-says-its-only-a-framework-11085956





