புதன், 13 ஜூலை, 2016

கூடங்குளம் கொள்ளை!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் இரண்டு அணுஉலைகளுக்கும் மொத்தம் ரூ. 22,000 கோடி செலவாகியிருப்பதாக இந்திய அணுமின் கழகத் தலைவர் திரு. எஸ்.கே. சர்மா யூலை 9 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இரண்டு உலைகளுக்கும் மொத்தச் செலவு ரூ. 13,000 கோடி என்று சொன்னவர்கள் பின்னர் ரூ. 17,000 கோடியாகிவிட்டது என்றார்கள். எப்படி ரூ. 4,000 கோடி திடுமென உயர்ந்தது என்று கேட்டபோது, போராட்டம்தான் காரணம் என்று மக்கள் மீது பழி போட்டார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, ரூ. 4,000 கோடி என்பது வட்டி (IDC, Interest During Construction) என்று எழுத்துபூர்வமாக பதில் சொன்னார்கள். இப்போது மொத்தச் செலவு ரூ. 22,462 கோடி என்று எழுத்துபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை, திரு சர்மா இந்த ரூ. 462 கோடி எல்லாம் “சும்மா பாக்கெட் மணி” என்று நினைத்து ரூ. 22,000 கோடி என்று சொன்னாரோ? விஞ்ஞானபூர்வமாக இப்படி குத்துமதிப்பாகத்தான் சொல்வார்களோ?
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது, 4-வது உலைகளுக்கு மொத்தம் ரூ. 39,849 கோடி செலவாகும் என்று யூலை 14, 2015 அன்று தகவல் அறியும் சட்டப்படி தகவல் தந்தார்கள். இப்போது இந்தத் தகவலை மீண்டும் கேட்டு, ஏன் முதலிரண்டு உலைகளைவிட 3-வது மற்றும் 4-வது உலைகளுக்கு இவ்வளவு அதிகமாகச் செலவாகிறது என்று கேட்டால், ஏதோ ஆணையைக் காட்டி பதில் சொல்ல முடியாது என்கிறார்கள் (கடிதத்தில் 2 & 3 பதிலைப் பாருங்கள்).
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா எனுமூரில் கட்டப்படவிருக்கும் அமெரிக்க AP-1000 அணுஉலைகளின் விலை என்ன என்று கேட்டால், பேரப்பேச்சு முடிந்த பிறகுதான் தெரியுமாம்.
அமெரிக்க, ரஷ்ய, ஃபிரெஞ்சு அணுஉலைகளுக்கு யார் விலை பேசுகிறார்கள்? எப்படி வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது? நாடாளுமன்றம் இதனை மேற்பார்வை செய்கிறதா? “ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டிக் கையே” என்பது போல, மக்கள் பணம்தானே என்று வயிறாரச் சாப்பிடுகிறார்கள் அணுஉலை அண்ணாச்சிமார்.
சும்மா சாப்பிடுங்க! அவரு உலகத்த சுத்தட்டும், அரசியல்வாதிகள் எல்லாம் ஊர அடிச்சு உலைல போடட்டும். நீங்களும் விட்டுறாதீங்க!

Related Posts: