புதன், 26 நவம்பர், 2025

ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 


jacto-geo

ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னையில் இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உயர்நிலை குழுக்கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில், கீழ்க்கண்டவாறு போராட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 11 & 12 மாவட்டத் தலைநகரங்களில் 'உரிமை மீட்பு முழக்கப் போராட்டம்' நடைபெறும். டிசம்பர் 27 மாவட்ட அளவில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். ஜனவரி 6, 2026 மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும்.

முன்னதாக, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. அரசின் எச்சரிக்கையையும் மீறி, இதில் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/jacto-geo-announces-indefinite-strike-from-jan-6-over-old-pension-scheme-10812025