ராணுவத்திற்கு பொருத்தமற்றவர்'... சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரியின் பணிநீக்கம் சரி - சுப்ரீம்கோர்ட்
25 11 2025
/indian-express-tamil/media/media_files/2025/11/20/supreme-court-i-2025-11-20-19-22-28.jpg)
'ராணுவத்திற்கு பொருத்தமற்றவர்'... சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரியின் பணிநீக்கம் சரி - சுப்ரீம்கோர்ட்
இந்திய ராணுவத்தில் அனைத்து மதங்களையும் குறிக்கும் அடையாளமாகத் திகழும் ‘சர்வ தர்ம ஸ்தலத்திற்கு’ (Sarva Dharma Sthal) செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி ஒருவரின் பணிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தனது மத நம்பிக்கை இறைவனை மட்டுமே வழிபடுவது என்பதால், மற்ற மத அடையாளங்கள் உள்ள இடத்திற்குச் செல்ல முடியாது என அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்திருந்தார்.
வழக்கின் பின்னணி:
சாமுவேல் கமலேசன் என்ற அந்த அதிகாரி, மேலதிகாரியின் உத்தரவை மீறி, மதத்தைக் காரணம் காட்டி சர்வ தர்ம ஸ்தலத்திற்குச் செல்ல மறுத்ததால் ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், மே 30-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், "சட்டப்பூர்வமான ராணுவ உத்தரவை விட மதத்தை உயர்வாகக் கருதுவது தெளிவான ஒழுங்கீனம்" எனக் கூறி பணிநீக்கத்தை உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனம்:
இந்த மனுவை விசாரித்தத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பாக்ச்சி அடங்கிய அமர்வு, அதிகாரியின் இச்செயலை "மிக மோசமான ஒழுங்கீனம்" என கடுமையாக விமர்சித்தது. அவர் மற்ற விஷயங்களில் வேண்டுமானால் சிறந்த அதிகாரியாக இருக்கலாம். ஆனால், ஒழுக்கத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் பெயர் பெற்ற இந்திய ராணுவத்திற்கு அவர் முற்றிலும் பொருத்தமற்றவர்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
வாதமும் - எதிர்வாதமும்:
அதிகாரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், "அதிகாரி சர்வ தர்ம ஸ்தலத்திற்குச் செல்ல மறுக்க வில்லை. பஞ்சாபில் அவர் பணியில் இருந்த இடத்தில் சர்வ தர்ம ஸ்தலம் இல்லை, மாறாக ஒரு கோவில் மற்றும் குருத்வாரா மட்டுமே இருந்தது. அவரை கருவறைக்குள் சென்று பூஜை செய்யவும், தட்டில் ஆரத்தி எடுக்கவும் வற்புறுத்தினர். ஒரே இறைவனை வழிபடும் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர் என்பதால், மாற்று மதச் சடங்குகளைச் செய்ய மட்டுமே அவர் மறுத்தார். இது அரசியலமைப்பு அவருக்கு வழங்கிய உரிமை," என்று கூறினார்.
வீரர்களை அவமதிக்கிறீர்கள்":
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீங்க ஒரு குழுவின் தலைவர். உங்க படையில் சீக்கிய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்காக குருத்வாரா உள்ளது. மதச்சார்பற்ற இடங்களில் ஒன்றான அங்கு செல்ல மறுப்பதன் மூலம், சொந்த வீரர்களையே நீங்க அவமதிக்கிறீர்கள் என்று சாடினர். மேலும், ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே (Pastor) இதில் தவறில்லை என்றும், சர்வ தர்ம ஸ்தலத்திற்குச் செல்வது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காது என்றும் உங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், மதத் தலைவரின் பேச்சைக் கூட கேட்காமல், உங்க சொந்த விளக்கத்தை வைத்துக்கொண்டு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். வேற்று மத ஆலயங்களுக்குச் செல்வதைக் கிறிஸ்தவ மதம் தடை செய்யவில்லை என்று கூறிய நீதிபதிகள், ராணுவத்தில் தனிப்பட்ட மத உணர்வுகளை விட, கூட்டுக்கட்டளை, ஒழுக்கமே முக்கியம் எனக் கூறி அதிகாரியின் வாதத்தை நிராகரித்தனர்.
source https://tamil.indianexpress.com/india/definitely-a-misfit-supreme-court-upholds-dismissal-of-christian-army-officer-for-refusal-to-enter-sarva-dharma-sthal-10811946





