திங்கள், 16 பிப்ரவரி, 2026

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை: இறுதி கட்டத்தில் ப்ளூ பிளாக் 2-ம் கட்டப் பணிகள்; எப்போது திறப்பு?

 

Marina Beach Blue Flag

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை: இறுதி கட்டத்தில் ப்ளூ பிளாக் 2-ம் கட்டப் பணிகள்; எப்போது திறப்பு?

மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட 'ப்ளூ பிளாக்' (Blue Flag) திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிப்.22-ம் தேதி இத்திட்டம் திறக்கப்பட உள்ளது. பிப்.17-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில சிறிய பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் டிடி நெக்ஸ்ட் நாளிதழிடம் கூறுகையில், "குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி அமைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்பத்தில் 2 விளையாட்டுப் பகுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது அது 4 விளையாட்டுப் பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில், சர்வதேச 'ப்ளூ பிளாக்' தரநிலைகளை எட்டும் நோக்கில், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டம்-1ஐ விட, இந்த பகுதியில் மணற்பரப்பு அகலமாகத் தக்கவைக்கப்பட்டு, கடற்கரை காட்சியை ரசிக்கும் வகையிலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ள வசதிகளானவை; 60 மூங்கில் இருக்கைகள் மற்றும் 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், 2 படிப்பகங்கள் (Study zones) மற்றும் 2 செல்பி புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மூங்கில் குப்பைக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான, உள்ளடக்கிய கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிலை அமைப்பதற்கான அடித்தளப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/marina-beach-blue-flag-phase-2-set-to-open-on-february-22-with-enhanced-amenities-11109519