வெள்ளி, 1 ஏப்ரல், 2022

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கம் – மத்திய அரசு

 

Deeptiman Tiwary 

Govt removes AFSPA from parts of Nagaland, Assam and Manipur: நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒரு டஜன் குடிமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து AFSPA ஐ அகற்றுமாறு வடகிழக்கில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து குரல் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பல தசாப்தங்களுக்குப் பிறகு நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் கட்டுப்பாடு செய்யப்பட்ட பகுதிகளைக் குறைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஜியின் தீர்க்கமான தலைமையின் கீழ் மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வியாழக்கிழமை ஒரு ட்வீட்டில் கூறினார்.

AFSPA இன் கீழ் பகுதிகள் குறைக்கப்பட்டது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் வடகிழக்கில் நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்கும், மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் பல ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பட்ட பாதுகாப்பு நிலைமை மற்றும் விரைவான வளர்ச்சியின் விளைவாகும்.” என்றும் அமித் ஷா கூறினார்.

“பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கு நன்றி, பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட நமது வடகிழக்கு பகுதி, இப்போது அமைதி, செழிப்பு மற்றும் இதுவரை இல்லாத வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை காண்கிறது. இந்த முக்கியமான தருணத்தில் வடகிழக்கு மக்களுக்கு நான் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்,” என்றும் அமித் ஷா கூறினார்.

ஏப்ரல் 1 முதல் இந்த வாபஸ் அமலுக்கு வரும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு மோன் கொலை சம்பவத்தை அடுத்து நாகாலாந்தில் இருந்து AFSPA ஐ அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆராய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை இந்த மாதம் சமர்ப்பித்திருக்க வேண்டும். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து குழு ஆலோசித்து வந்த நிலையிலும், கடந்த டிசம்பரில் நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

நாகாலாந்தில் AFSPA தடை கட்டுப்பாடு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலாவதியாக இருந்தது, ஏனெனில் மாநிலத்தில் கடைசியாக ஜூன் 30 அன்று நீட்டிக்கப்பட்டது. AFSPA சட்ட கட்டுப்பாடானது, ஒரு பகுதி அல்லது ஒரு பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு விதிக்கப்படலாம், அதன் பிறகு அரசாங்கம் தேவை என்று கருதினால் அது நீட்டிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்: நர்ஸ் கூட்டு பலாத்காரம்; தேசிய அளவிலான நீச்சல் வீரர்கள் 4 பேர் கைது

டிசம்பர் 26 அன்று, நாகாலாந்தில் AFSPA ஐத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு செயலர் நிலை அதிகாரி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது. குழுவுக்கு மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டது.

டிசம்பர் 4 அன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் 6 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ஆயுதப்படை குழுவின் ஆப்ரேஷனில் தவறுதலாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த குழு அமைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பிறகு, நாகாலாந்து சட்டமன்றம் AFSPA-ஐ ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

பதிவாளர் ஜெனரல் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் பியூஷ் கோயல், நாகாலாந்து தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல், அசாம் ரைபிள்ஸ் டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2004-ல் அப்போதைய மன்மோகன் சிங் அரசால் அமைக்கப்பட்ட ஜீவன் ரெட்டி கமிட்டி AFSPA-ஐ ரத்து செய்ய பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, இது குறித்து ஆராய அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், மோடி அரசு ரெட்டி கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரித்தது மற்றும் அமைச்சரவை துணைக் குழுவும் கலைக்கப்பட்டது.

அதன்பிறகு, AFSPAவை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வது பற்றியோ அல்லது எந்த மாநிலத்திலிருந்தும் அதை அகற்றுவது தொடர்பாகவோ எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. மாநில அரசுகள், ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஏஜென்சிகளுடன் உரிய ஆலோசனைக்குப் பிறகு அரசால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ AFSPA திணிக்கப்படுகிறது அல்லது அகற்றப்படுகிறது என்று அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

AFSPA ஒரு மாநிலம் அல்லது ஒரு மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். “மாநிலங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய அமைப்புகளின் கருத்தைப் பெற்ற பிறகு இது செய்யப்படுகிறது. முழு செயல்முறையும் உள்துறை செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது,” என்று ஒரு அதிகாரி விளக்கினார்.

முன்னதாக மோடி அரசாங்கம் AFSPA ஐ முழுமையாக மேகாலயாவில் இருந்தும், பகுதியளவு அருணாச்சல பிரதேசத்தில் இருந்தும் நீக்கியுள்ளது. மார்ச், 2018 இல், உள்துறை அமைச்சகம் மேகாலயாவிலிருந்து AFSPA ஐ முழுமையாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் அசாம் எல்லையில் உள்ள எட்டு காவல் நிலையப் பகுதிகளில் இருந்தும் அகற்ற உத்தரவிட்டது. ஓராண்டுக்குப் பிறகு, இது மேலும் நான்கு காவல் நிலையங்களாகக் குறைக்கப்பட்டது. அருணாச்சலத்தில் தற்போது இந்த நான்கு காவல் நிலையங்கள் தவிர மூன்று மாவட்டங்கள் AFSPA கீழ் உள்ளன.

source https://tamil.indianexpress.com/india/govt-reduce-disturbed-areas-in-3-ne-states-under-afspa-amit-shah-433805/