17 4 2022

சமீப காலமாக, ஆன்லைன் நூதன மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எளிதாக திருடி மாயமாகிவிடுகின்றனர். தொழில்நுட்ப உலகில் மறைந்துகொள்ளும் மோசடிகாரர்களை கண்டறிவதும் கடினமான ஒன்றாகும். இதனை கருத்தில்கொண்டு, அவ்வப்போது வங்கி தரப்பிலும், காவல் துறையினர் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், மோசடி நிகழ்வுகள் குறைந்தப்பாடில்லை. தொழில்நுட்பத்தை அறியாதோர் ஹேக்கர் வலையில் சிக்குவதாக கூறி வந்த நிலையில், 2 மருத்துவர்கள், 1 இன்ஜினியர் என 4 பேரின் வங்கி கணக்கில் இருந்து ஒரே நாளில் பணம் திருடப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கவிதா, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு உங்களது பான் கார்டு காலாவதி ஆகிவிட்டது. உடனடியாக புதிய பான் கார்டு பெற்று வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மெசேஜ் வந்துள்ளது.
இதனை உண்மை என நம்பிய கவிதா, வங்கி கணக்கு விவரங்களை அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில், வங்கி கணக்கில் இருந்து ரூ16 ஆயிரத்தை திருடியுள்ளனர்.
இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஹேமா வங்கி கணக்கில் இருந்து ரூ90 ஆயிரமும், மருத்துவர் செந்தில் வடிவேல் வங்கி கணக்கிலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் திருடு போய் உள்ளது. இந்த மூன்று ஆன்லைன் மோசடி சம்பவங்கள் குறித்து மயிலாப்பூர் குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ராயப்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் விஜய ராகவேந்திரன் வங்கி கணக்கில் இருந்து ரூ96 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ராயப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறை, செல்போனுக்கு வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-4-online-fraud-cases-registered-in-single-day-442023/