சமூக வலைதளங்களால் உருவான தன்னெழுச்சியான போராட்டமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் எப்படி நிகழ்ந்தது அதில் சமூக வலைதளங்கள் பங்களிப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
தேர்தலில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு எப்போது தொடங்கியது., அது எவ்வளவு தூரம் வாக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை “தேர்தலும் .. தொழில் நுட்பமும்” எனும் தலைப்பில் தொடராக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இணையதளம், கூகுள், யூடியூபுக்கு அடுத்தபடியாக சமூக வலைதளங்களின் பங்கு எங்கே தொடங்கியது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2010 மற்றும் 2012 காலகட்டத்தில் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் உருவான எழுச்சிப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றத்திலும் சமூக வலைதளங்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. இந்த மிகப்பரும் எழுச்சியை அரபு வசந்தம் என்று அழைத்தனர்.
அரபு வசந்தம் :
அரபு வசந்த அல்லது முதல் அரபு வசந்தம் என்பது அரசுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்கள் , எழுச்சிகளுக்கு பிறகு நடைபெற்ற ஒரு ஆட்சி மாற்றமாகும். 2010ம் ஆண்டு காலகட்டத்தின் முற்பகுதியில் துனிசியாவிலிருந்து இது தொடங்கியது. ஊழல் மற்றும் பொருளாதார தேக்கத்தினை கண்டிக்கும் விதமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சியின் வெளிப்பாடுதான் அரபு வசந்தமாகும்.
இப்போராட்டங்கள் துனிசியாவோடு நின்றுவிடவில்லை. மாறாக லிபியா , எகிப்து , ஏமன் , சிரியா மற்றும் பஹ்ரைன் ஆகிய ஐந்து நாடுகளுக்கும் பரவியது. இதன் மூலம் ஏற்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் தந்த நெருக்கடியால் ஆட்சியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
2011ல் துனிசியாவின் ஜைன் அல் அப்துன் பின் அலி , 2011ல் லிபியாவின் முஹம்மது கடாபி , 2011ல் எகிப்தின் ஹொஸ்னி முபாரக் , மற்றும் 2012ல் ஏமனின் அலி அப்துல்லா சலே ஆகியோர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். இக்காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்கள், கலவரங்கள் உட்பட பெரும் கிளர்ச்சிகள் மற்றும் வன்முறைகள் நிகழ்ந்தன.
சமூக வலைதளங்களின் பங்கு
துனிசியா போரட்டத்தின் அனுபவத்திலிருந்து ஊக்கம் பெற்று 2011, ஜனவரி 25-ம் தேதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் மற்றும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டனர். அவர்கள் அனைவரும் எகிப்தில் 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத சர்வாதிகாரியாக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கெய்ரோவின் வீதிகளில் ஒன்று திரண்டனர்.
தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய சிலர் தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு போராட வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஹோஸ்னி முபாரக் உடனடியாக இணைய சேவைகளை முடக்கி, கடுமையான அடக்குமுறையை ஏவினார். பத்து லட்சம் பேர் ஒரே நேரத்தில் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியதும், மக்களின் கோபம் கடுமையாக இருப்பதை அறிந்துகொண்ட முபாரக், தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு, அவருக்குக் கீழே துணை அதிபர் என்கிற புதிய பதவியை முதன்முறையாகக் கொண்டுவந்தார்.
மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடாரம் கட்டித் தங்கத் தொடங்கினார்கள். முபாரக் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவத்தின் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு ஓடினார்.
தஹ்ரீர் சதுக்கமும்.. அஸ்மா மெஹ்ஃபூஸும்..
ஜனவரி 2011 இல் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் கிளம்பிய மக்கள் எழுச்சியை தூண்டிய பெருமை அஸ்மா மெஹ்ஃபூஸுக்கு உண்டு. 2012 ஜனவரி 18 அன்று பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ எகிப்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி மக்களை போராட்டத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு , சில மணிநேரங்களிலேயே “வைரலாக” ஆனது. அந்த வீடியோவில் பேசிய அஸ்மா அரசின் அடக்குமுறைக்கு எதிராக தஹ்ரிர் சதுக்கத்தில் திரளுமாறு மக்களை அழைப்பு விடுத்தார். இந்த வீடியோதான் வெகுவாக பகிரப்பட்டு மக்களை ஒருங்கிணைத்தது. தஹ்ரீர் சதுக்கத்தில் ஏற்பட்ட போராட்டம்தான் ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் வேட்பாளரான முகம்மது முர்சியின் முதல் ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுத்தது.
தொழில்நுட்பத்தின் அடுத்த பாய்ச்சலை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..
-அகமது AQ
source https://news7tamil.live/arab-spring-and-regime-change-caused-by-social-media.html