சனி, 30 மார்ச், 2024

அமெரிக்கா, ஜெர்மனியைத் தொடர்ந்து ஐ.நா: கெஜ்ரிவால் கைது பற்றி கருத்து

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஜெர்மனியும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையும்  இதுகுறித்து பதிலளித்துள்ளது. கைது குறித்து உலக நாடுகள், "நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியுள்ள நிலையில், இதே போல்  ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், "இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசுகையில், “இந்தியாவில் உள்பட தேர்தல் நடைபெறும் நாட்டில், அரசியல் மற்றும் சிவில் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம். உரிமைகள் மற்றும் அனைவரும் சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலில் வாக்களிக்க முடியும் என்று கூறினார்.

கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கத்தை தொடர்ந்து இந்தியாவில் நிலவும் "அரசியல் அமைதியின்மை" குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது டுஜாரிக் இந்த கருத்தை தெரிவித்தார்.

முன்னதாக, இதுகுறித்தான அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பிய போதிலும் அமெரிக்கா மீண்டும் கருத்து தெரிவித்தது. இந்த விவகாரத்தில், "நியாயமான, வெளிப்படையான விசாரணை வேண்டும்" என்று கூறியது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது உட்பட இந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். வரவிருக்கும் தேர்தல்களில் திறம்பட பிரச்சாரம் செய்வதை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறும் அக்கட்சியின் குற்றச்சாட்டையும் நாங்கள் அறிவோம். இந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ” என்று அவர் கூறினார்.

இதே போல் வெள்ளிக்கிழமை, ஜெர்மனியின் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷர் கூறுகையில், "இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகளும் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்"  என்று கூறினார். 


source https://tamil.indianexpress.com/india/un-reacts-to-delhi-cm-kejriwals-arrest-4432093