நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக என தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட INDIA கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
திருச்செந்தூர் அருகே உள்ள தன்டுபத்து கிராமத்தில் நடைபெற்றது. இதில் சுமார்
10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி
எம்பி கலந்து கொண்டார். அவருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில்
உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டர்.
அப்போது கனிமொழி எம்.பி பேசியதாவது:
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். சென்ற முறை இங்கே நான்
வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது கனிமொழி வெற்றி பெற்ற பிறகு தூத்துக்குடிக்கு
வருவாரா? என்று விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால் இன்று எனது இரண்டாவது தாய்
வீடு தூத்துக்குடி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த மக்களோடு, இந்த மண்ணோடு
கலந்திருக்கக் கூடிய உறவை, உணர்வைப் பெற்றிருக்கக் கூடியவளாக நான் உங்கள்
முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன்.
இங்கே ஒரு பிடி அளவு மண் கூட பாஜகவிற்குச் சொந்தம் என்று சொல்ல முடியாத,
சொல்லக்கூடாத ஒரு நிலையை நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும். ஏனென்றால்
நம்முடைய பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் வாரத்திற்கு மூன்று நாள், நான்கு
நாள் தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஆனால் இதுவரை தமிழ்நாடு சந்தித்து
இருக்கக்கூடிய ஏதாவது பேரிடர் நேரத்தில் உதவிகரம் நீட்டுவதற்கு, மக்களுடைய
துயரைத் துடைப்பதற்கு, மக்களோடு நின்று பணியாற்றுவதற்கு வந்திருக்கிறாரா?
வந்ததில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் கண்ணீரோடு இருந்த போது
மத்திய அரசாங்கம் இன்று வரைக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வில்லை.
நிதி அமைச்சர் , நம்ம போய் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது போல நம்மை
தரக்குறைவாகப் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த மதமாக இருந்தாலும், எந்த மொழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இங்கே நிம்மதியாக, பாதுகாப்போடு வாழக்கூடிய ஒரு நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
எப்படி மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஆட்சி
செய்து கொண்டிருக்கக்கூடிய அத்தனை மாநிலங்களிலும் எப்படி கலவரங்களை
உருவாக்கினார்களோ அதை தமிழகத்திலே நடத்திப் பார்த்து விட வேண்டும் என்ற கனவோடு அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
நம்முடைய முதலமைச்சருக்கு ஆளுநர் என்னென்ன வழியிலே தொல்லை கொடுத்து வருகிறார். ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தான் சாட்டை எடுக்க வேண்டி இருந்தது.
உச்சநீதிமன்றம் கூப்பிட்டு ஒரு மிரட்டல் போட்டதும் அமைச்சர் பொன்முடிக்குப் பதவிப்பிரமாணத்தைச் செய்து விட்டு அடங்கிக் கிடக்கிறார். வழக்காடு
மன்றத்தை நாடி தான் தமிழ்நாடு நியாயம் பெற வேண்டும் என்ற ஒரு நிலைக்கு நாம்
தள்ளப்பட்டு இருக்கிறோம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி
என்று யார் யாரெல்லாம் அவர்களுக்கு எதிராகக் கேள்வி கேட்கக் கூடியவர்களாக
இருக்கிறார்களோ அவர்களைச் சிறையில் அடைப்பது, வழக்குப் போடுவது, காங்கிரஸ்
கட்சியுடைய வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருக்கக் கூடிய நிலை, தேர்தல்
நேரத்தில் பணம் எடுத்து செலவு பண்ணி விடக்கூடாது என்று அவர்களுக்கு பயம். ஆனால் அவர்களைப் பார்த்து நாம் பயப்படவேண்டும் என்று பாஜகவினர் ஆசைப்படுகின்றனர்.
நீங்கள் எங்களைச் சிறைக்கு அனுப்பினாலும், என்ன செய்தாலும் இந்த நாட்டு மக்கள் இனிமேல் உங்களுக்குப் பயப்படுவதாக இல்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு விழும் ஒவ்வொரு வாக்குகளும் பாஜகவிற்கு இடியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக எந்த தொகுதியிலும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கக் கூடாது. தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனும் பாஜகவை எதிர்க்கத் தயாராகி விட்டார்கள். பாஜகவினர் பெட்டி படுக்கைகளை எடுத்து வைத்து தயாராக இருங்கள்.
source https://news7tamil.live/bjp-is-trying-to-create-riots-in-tamil-nadu-where-we-live-together-kanimozhi-mp.html#google_vignette