தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற வேட்பாளர் பட்டியலும் வெளியிட்டது. தமிழ்நாட்டில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக மமக கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது. மேலும் இந்த ஆண்டும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கும், எம்.பி ராகுல் காந்திக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மனித நேய மக்கள் கட்சி இந்தியா கூட்டணியை ஆதரித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 திமுக வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. தமிழ்நாட்டில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இஸ்லாமியருக்கு வாய்ப்பு அளித்து இஸ்லாமிய மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
source https://news7tamil.live/congress-candidates-should-be-given-a-chance-to-muslims-kharke-mla-leader-jawahirullahs-letter-to-rahul.html