ஞாயிறு, 24 மார்ச், 2024

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்;

 மக்களவைத் தேர்தல் திருவிழா உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழ்நாட்டில் இந்த மக்களைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என  3 கூட்டணிகள் மோதுகின்றன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதே போல, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, வடசென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பால் கனகராஜ் பா.ஜ.க சார்பில் வட சென்னை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் முறையான அனுமதியின்றி திருமணம் மண்டபத்தில் கூட்டம் நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் அதிகாரிகள் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் விசாரனை நடத்திய தண்டையார்பேட்டை போலீசார், வட சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/case-registered-against-bjp-candidate-paul-kanagaraj-under-3-sections-for-violation-of-mcc-4410001