தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் 1.58 லட்சம் பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,495 பேருக்கு புற்றுநோய்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களைத் தவிர்க்கும் விதமாக 30 வயதைக் கடந்த பெண்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டமும், 18 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டமும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இத்திட்டம் முதல்கட்டமாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
“திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 6 லட்சம் பேரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்மூலம், 89,947 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,889 பேருக்கு புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகள் இருப்பது தெரியவந்தது.
68,500 பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3,606 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். 2.22 லட்சம் பேருக்கு வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், 1,203 பேருக்கு அதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.”
இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
source https://news7tamil.live/5000-women-in-4-districts-in-tamil-nadu-have-cancer-symptoms.html#google_vignette