டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மோடி அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் பார்த்தோமானால் பாஜகவினர் செய்த ஊழல்களை எல்லாம் மறைத்து ஏதோ அவர்கள் நல்லவர்கள் போல் பேசி வருகிறார். மோடி அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளது. அதைப்பற்றி ஒரு விசாரணை நடக்கவில்லை. கடந்த ஆண்டு துணை முதலமைச்சரை கைது செய்தார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு முதலமைச்சர் என்று கூட பாராமல் கைது செய்து இருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஏன் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலை சிபிஐ விசாரிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
source https://news7tamil.live/arvind-kejriwal-arrested-dmk-protest.html