திங்கள், 25 மார்ச், 2024

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்”

 

மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை நத்தம் சாலையில் உள்ள ஊமச்சிகுளத்தில் திமுக கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :

“மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு செங்கலையும் எடுத்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் தான்  செங்கலை திருப்பித் தருவேன்.

மாநில உரிமைகளை மீட்டெடுக்கவே தேர்தலில் போட்டியிடுகிறோம். அதிமுகவினர் மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.6.3 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரி  செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மாநில அரசுக்கு ரூ. 1.3 லட்சம் கோடி மட்டுமே திருப்பித் தந்துள்ளது.

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இதுவரை  28 மாணவ – மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். கொரோனா பரவல் காலகட்டத்தில் பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டுக்குள் சென்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தங்களது குழந்தை பார்த்துக் கொள்வதற்கு முதலமைச்சர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்புகிறார்கள்.  தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்குவது திமுகவின் பொறுப்பு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யவேண்டும்”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

source https://news7tamil.live/rights-of-tamil-naducentral-government-minister-udayanidhi-stalins-accusation-against-aiadmk.html#google_vignette