வெள்ளி, 22 மார்ச், 2024

தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!

 

தேர்தல் சமயங்களில் மாநில டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றுவது போல் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென திமுக எம்.பி., வில்சன் வலியுறுத்தியுள்ளார். 

 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது.  மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

தேர்தல் காலங்களில் மாநிலங்களில் உள்ள தலைமை அதிகாரிகள் சிலரை மாற்றம் செய்வதை தேர்தல் ஆணையம் வாடிக்கையாக வைத்துள்ளது.  மேற்கு வங்கத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3 முறை டிஜிபிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் திமுக எம்.பி வில்சன், தேர்தல் ஆணையத்திற்கு புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

மாநிலங்களில் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளை மாற்றுவது போல், சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் அதிகாரிகள் மாற்றப்படுவார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

“தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது,  தேர்தல் காலங்களில் சில டி.ஜி.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தேர்தல் ஆணையத்தின் பொதுவான நடைமுறையாகும்.  ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசுக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள்,  தேர்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் சம வாய்ப்பை உருவாக்க இது உதவும்.

கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவதற்கும்,  முடக்குவதற்கும், குறி வைப்பதற்கும் வருமானவரித்துறை,  அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்திய வரலாறு பாஜகவுக்கு இருக்கும் போது,  இந்த விதி இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பொருந்தும் அல்லவா? மாநிலங்களுக்கு ஒரு விதி.. ஒன்றியத்திற்கு ஒரு விதியா?

தேர்தல் நடைமுறையின் புனிதத்தை பாதுகாக்கவும்,  ஒரு சமதளத்தை உருவாக்கவும், தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை,  வருமான வரித் துறையின் இயக்குநர் ஜெனரல்கள்,  அமலாக்கத் துறையின் இயக்குநர் மற்றும் சிபிஐ இயக்குநர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்! ஜனநாயகம் என்ற திருவிழாவை மாசுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.  இத்தகைய கோரிக்கையை முன்வைப்பதில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளும் கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/will-cbi-it-ed-chiefs-also-be-changed-during-elections-dmk-mps-question-to-election-commission.html