தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்! 28 3 2024
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் – 28) நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு கூறியதாவது:
தமிழ்நாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 6, 23,26,901 வாக்காளர்கள் இருப்பதாகவும் இதில் 3,06,02 367 ஆண் வாக்காளர்களும் 3,17,16,069 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8, 465 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், முதல் முறை வாக்காளர்கள் 10, 90, 574 பேர் உள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 1403 ஆக உள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இரண்டாம் இடத்தில் வடசென்னை தொகுதியில் 54 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு கூறினார்.