காங்கிரஸ் கட்சியை நிதிரீதியாக முடக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2018-19ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் பல வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம் செலுத்துமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“ஒரு கட்சி பல ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு கட்சி கடுமையான வரிக் கோரிக்கைகளை எதிர்கொள்ளும் போது, தேர்தல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமாகவும் நடத்தப்படும் என்று நாம் எவ்வாறு கூற முடியும்? ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல. நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் போலி முயற்சிகளே அன்றி வேறில்லை. ஆனால் இந்த வித்தையால் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம். வரும் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் பாஜகவுக்கு அனைத்து பதில்களையும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
பாஜகவின் ரூ.8,250 கோடி தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ஊழல் நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்கள் நண்பர்களின் நிதியை ஆதரிக்கும் போது, வருமான வரித்துறை வசதியாக காங்கிரஸை குறிவைத்து மற்றொரு ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.”
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
source https://news7tamil.live/bjp-is-doing-the-work-of-financially-crippling-the-congress-party-b-chidambaram-accused.html