அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு சுயநலக் குழு முயன்று வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், “ஊழல் உள்ளிட்ட அரசியல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்களின் வழக்குகளில் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “நீதிமன்றங்களின் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சிலர் முயற்சிகளை செய்துவருகின்றனர்.
இவர்கள் இருளில் சமூக ஊடக தளங்கள் வாயிலாக நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களின் கோமாளித்தனமான நம்பிக்கைகள் சூழலை கெடுப்பதாக உள்ளன.
சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு அவர்கள் நமது நீதிமன்றங்களை தள்ளுகிறார்கள்” எனக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, “இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கடிதத்தில், ஆதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல், பிங்கி ஆனந்த், ஹிதேஷ் ஜெயின், உஜ்வாலா பவார் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/600-lawyers-write-to-cji-complain-of-vested-interest-group-trying-to-pressure-judiciary-4429077