சனி, 30 மார்ச், 2024

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: 3 நாளுக்கு முன் ரூ 10,000 கோடி தேர்தல் பத்திரம் அச்சடிக்க அரசு அனுமதி

  தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவு போட்டது. 

இந்த உத்தரவின்படி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. இதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தமாக 22,217 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. அதில் பா.ஜ.க ரூ.8,451 கோடியும், காங்கிரஸ் ரூ.1,950 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,707.81 கோடியும் மற்றும் பி.ஆர்.எஸ் ரூ.1,407.30 கோடியும் பணமாக்கியுள்ளன. 


இந்நிலையில், தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மத்திய அரசின் நிறுவனமான இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் (Security Printing and Minding Corporation of India - எஸ்.பி.எம்.சி.ஐ.எல்)  மூலம் தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு நிதி அமைச்சகம் கடைசி ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28 அன்று, நிதி அமைச்சகம் எஸ்.பி.ஐ. (பாரத ஸ்டேட் பேங்க்) வங்கியிடம் பத்திரங்களை அச்சிடுவதை "உடனடியாக நிறுத்தும்படி" கூறியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பெற்ற தகவலின் அடிப்படையில், நிதி அமைச்சகம் மற்றும் எஸ்.பி.ஐ வங்கி இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் கோப்பு குறிப்புகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் ஏற்கனவே 8,350 பத்திரங்களை அச்சடித்து எஸ்.பி.ஐ-க்கு அனுப்பியுள்ளது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

எஸ்.பி.ஐ-யின் பரிவர்த்தனை வங்கித் துறையின் உதவி பொது மேலாளர்,  “23.02.2024 தேதியிட்ட மொத்தம் 8350 பத்திரங்கள் கொண்ட மின்னஞ்சலைக் கொண்ட தேர்தல் பத்திரங்களின் 4 பெட்டிகளின் பாதுகாப்புப் படிவங்களின் ரசீதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 12.01.2024 தேதியிட்ட பட்ஜெட் பிரிவு கடிதத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார். 

பிப்ரவரி 27 தேதியிட்ட ஒரு குறிப்பில், 400 கையேடுகள் மற்றும் 10,000 தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவதற்கான ஆர்டர் இருந்தது என்றும், இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்திற்கு ஆர்டரை வழங்குவதற்கான “இந்திய அரசாங்கத்தின்” ஒப்புதல் இறுதியாக பிப்ரவரி 12 அன்று வழங்கப்பட்டது என்றும் பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவில் இருந்து எஸ்.பி.ஐ மற்றும் அமைச்சகத்தில் உள்ள மற்றவர்களுக்கு மற்றொரு கடிதம் வந்துள்ளது. அதில், “மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தி வைக்க இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது." என்று தெரிவித்துள்ளது. 


source https://tamil.indianexpress.com/india/three-days-before-supreme-court-scrapped-scheme-govt-cleared-printing-of-rs-10-000-cr-electoral-bonds-tamil-news-4433379