13,10.2024
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) மூத்த தலைவர் பாபா சித்திக் (66) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
யார் இந்த பாபா சித்திக்?
முன்னாள் மகாராஷ்டிர அமைச்சரும், மூன்று முறை பாந்த்ரா மேற்கு எம்.எல்.ஏ.வாகவும் இருந்த பாபா சித்திக், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸில் இருந்து விலகி, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி-யில் சேர்ந்தார். இவரது மகன் ஜீஷன் தற்போது பாந்த்ரா கிழக்கு எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Live Updates | NCP Leader Baba Siddique shot dead:
ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் சஞ்சய் தத் போன்ற முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட தனது வருடாந்திர இப்தார் விருந்துகளுக்காகவும் பாபா சித்திக் அறியப்படுகிறார்.
முன்னாள் மகாராஷ்டிர அமைச்சரான பாபா சித்திக் காங்கிரஸுடன் தனது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்கினார். விரைவில் கட்சியின் முன்னாள் மூத்தவரும் நடிகருமான மறைந்த சுனில் தத்தின் நெருங்கிய உதவியாளரானார். சித்திக் தத் குடும்பத்துடன், குறிப்பாக அவரது மகன் சஞ்சய் தத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தினார்.
1992 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் மும்பை குடிமை அமைப்பின் கார்ப்பரேட்டராக சித்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில், பாந்த்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்று, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனது தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.
கைது
இந்த நிலையில், பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டதாக முமபையில் உள்ள லீலாவதி மருத்துவமனை உறுதிப்படுத்தி இருக்கிறது.
பாபா சித்திக் கொலை சம்பவம் மும்பையை உலுக்கி இருக்கும் சூழலில், இது தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் என இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்துமும்பை காவல்துறையின் சிறப்பு ஆணையர் தேவன் பார்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். இந்த வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
தலைவர்கள் கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், இது மிகவும் "துரதிர்ஷ்டவசமானது" என்றும், "குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் கூறினார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், ''ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்தும், முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. மும்பையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து நாங்கள் எச்சரித்து வருகிறோம், ஆனால் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மும்பை அமைதியாக இருந்தது ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த அரசாங்கம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்." என்று கூறியுள்ளார்.
என்.சி.பி (எஸ்.பி) தலைவர் சரத் பவார் பேசுகையில், “மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது கவலை அளிக்கிறது. முன்னாள் அமைச்சர் பாப்பா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆளும் தரப்பும், உள்துறை அமைச்சரும் இந்த மென்மையுடன் ஆட்சியை நடத்தப் போகிறார்கள் என்றால், அது அச்சமூட்டும் அறிகுறி. இதற்கு விசாரணை கூட தேவையில்லை ஆனால் ஆளும் தரப்பு பொறுப்பேற்று பதவியை விட்டு விலக வேண்டும். பாபா சித்திக்கின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும் என்சிபி (எஸ்பி) தலைவருமான அனில் தேஷ்முக் கூறுகையில், “ஒய் பிரிவு பாதுகாப்பு இருந்தபோதிலும் அவர் சுடப்பட்டுள்ளார். இது மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பறைசாற்றுகிறது." என்று கூறியுள்ளார்.
சிவசேனா (யு.பி.டி) செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே பேசுகையில், “மும்பையில் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்றால், அரசாங்கத்தின் தலைவர்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், இந்த அரசு சாமானிய மக்களை எவ்வாறு பாதுகாக்கும்? தங்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாவிட்டால், உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும். ஏக்நாத் ஷிண்டேவுக்கு மாநில முதல்வராக தொடர உரிமை இல்லை. மும்பை தெருக்களில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. மூன்று ரவுண்டுகள் சுடப்பட்டு மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இதுதானா சட்டம் ஒழுங்கா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/ncp-leader-baba-siddique-shot-dead-in-mumbai-tamil-news-7310378