ஞாயிறு, 13 அக்டோபர், 2024

மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை” – #Mysuru – Darbhanga ரயில் விபத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி கண்டனம்!

 

கவரப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578), நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. ஆனால் இதனால் 4 தண்டவாளங்கள் சேதமடைந்து, மற்ற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எப்பொழுதுதான் மத்திய அரசு விழித்துக்கொள்ளும் என, இந்த விபத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியுள்ளது. பல விபத்துகளில், பல உயிர்கள் பறிக்கொடுக்கப்பட்டாலும் எந்த பாடமும் இந்த அரசு கற்கவில்லை. மத்திய அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://news7tamil.live/rahul-gandhi-condemns-mysuru-darbhanga-train-accident-centre-government-has-not-learned-due-lesson-despite-many-accidents.html