செவ்வாய், 3 டிசம்பர், 2024

தமிழ்நாடு ஃபீஞ்சல் புயல் பாதிப்பு: ரூ. 2000 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

 

CM letter

ஃபீஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான நபர்கள் மற்றும் 69 லட்சம் குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், புயல் பாதிப்பை கருத்திற்கொண்டு மத்திய அரசு சார்பில் ரூ. 2000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை புயல் ஏற்படுத்தியுள்ளது என்று ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. 38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டாலினின் கடிதத்தில் புயலால் உள்கட்டமைப்பு, விவசாயம், வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “புயலின் விளைவாக 12 பேர் உயிரிழந்தனர். 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள், 2,11,139 ஹெக்டேர் விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 9,576 கிமீ சாலைகள் சேதம், 1,847 தொட்டிகள் மற்றும் 417 நீர்த்தேக்கங்கள் அழிந்துள்ளன. 1,649 கிமீ மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகள், 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள், 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளி கட்டிடங்கள், 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன“ என்று கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது..

பேரிடர் பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “மாநில அரசு இந்த சேதங்களின் ஆரம்ப மதிப்பீட்டை மேற்கொண்டது. தற்காலிக மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு 2,475 கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், இந்த பேரழிவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது. மேலும் இந்த இயற்கை பேரழிவின் வீழ்ச்சியை நிர்வகிக்க அவசர நிதி உதவி தேவை, ”என்று ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/first-responders-deaths-stalin-cyclone-fengal-rs-2000-crore-centre-7756169