செவ்வாய், 3 டிசம்பர், 2024

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூர கொலை; அமைச்சர் சாமிநாதனிடம் சரமாரி கேள்வி எழுப்பிய பெண்!

 palladam murder

அந்த பெண்ணின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் சாமிநாதன் அமைதியாக நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழநந்தவரின் மனைவி, அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அந்த பெண்ணின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் சாமிநாதன் திணறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். 

விவசாயி தெய்வசிகாமணி, அலமேலு தம்பதி சேமகவுண்டம்பாளையத்தில் தென்னை விவசாயம் செய்து வந்தனர். கோவையில் வசித்து வந்த அவர்களுடைய மகன் செந்தில் குமார் உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்வதற்காக கோவையில் இருந்து பெற்றோரைக் காண கடந்த வியாழக்கிழமை சேமகவுண்டம்பாளையம் வந்திருந்தார். மூன்று பேரும் இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகு, உறங்கச் சென்றுள்ளனர். 

அன்று நள்ளிரவு நேரத்தில் அவர்களுடைய தோட்டத்தில், நீண்ட நேரமாக நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், தெய்வசிகாமணி எழுந்து வெளியே போய் பார்த்தபோது, அங்கே மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் தெய்வசிகாமணியை அரிவாளால் வெட்டினர். பின்னர், அவர்கள், வீட்டிற்குள் புகுந்து அவருடைய மனைவி அலமேலுவையும் மகன் செந்தில்குமாரையும் தலையில் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

மறுநாள் காலை அவர்கள் வீட்டிற்கு சென்ற சவரத் தொழிலாளி வல்பூரான், அங்கே மூன்று பேரும் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய கிடந்த தெய்வசிகாமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சம்பவ இடத்துக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் அமைச்சரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர் சாமிநாதன் திணறினார். 

அமைச்சர் சாமிநாதனிடம் பேசிய செந்தில்குமாரின் மனைவி கவிதா, "காவல் துறையினர், தமிழக அரசு நம்மை சும்மா விடமாட்டார்கள் என்ற யோசனை இருந்தாலே இதுபோல கொலைகள் நடக்காது. இந்தக் கொலைச் சம்பவத்துக்கு முழுக்க முழுக்க உங்களுடைய அரசாங்கத்தின் தப்புதான் காரணம். விவசாயி, விவசாயி என்று கூறி பப்ளிசிட்டி மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இன்று எங்களுக்கு நடந்தது. நாளைக்கு மற்றவர்களுக்கு நடக்காது என்பது எப்படி நிச்சயம். கொலைக் குற்றவாளிகளை பிடிக்கிறீர்கள் என்பதில் பிரச்னை இல்லை. அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரிய வேண்டும். அப்போது தான் மற்ற திருடர்களுக்கு பயம் ஏற்படும். கொலைக் குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். எங்களது மாமன், மச்சான் யாருக்கும் எந்தவொரு கெட்ட பழக்கங்களும் இல்லை. அவர்கள் உண்டு, வேலையுண்டு என்று இருப்பார்கள். அப்பாவி மூன்று பேரை கொன்றிருக்கின்றனர். நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம். எங்களுடைய நிலையை நினைத்துப் பாருங்கள். எதாவது பிரச்னையில் கொன்றிருந்தால் கூட பரவாயில்லை. அவிநாசிபாளையத்தில் அவ்ளோ பெரிய ஜங்ஷனில் ஒரு கேமரா கூட இல்லை. விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினர் மேல் பயம் இல்லை. அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தார்.

கொலையான செந்தில் குமாரின் மனைவி கவிதா சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சாமிநாதன் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/three-members-of-the-same-family-brutally-murdered-in-palladam-woman-questions-minister-saminathan-7755998

Related Posts: