ஞாயிறு, 8 டிசம்பர், 2024

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 

Chennai IMD rain update for next 7 days Tamil News

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் டிசம்பர் 8 கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து வரும் டிசம்பர் 9 இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், வரும் டிசம்பர் 8 மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் டிசம்பர் 9 கனமழை பெய்யும் எனவும் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் டிசம்பர் 9 கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 10 மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

வருகிற 12 ஆம் தேதி காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 


source https://tamil.indianexpress.com/tamilnadu/new-low-pressure-imd-announcement-chance-to-heavy-rain-in-tamil-7783928

Related Posts: