நாடாளுமன்றத்தில் தற்போது இந்தி தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தென்னிந்திய எம்.பி.க்கள் இந்த விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை தீவிரமாக பதிவு செய்துள்ளனர்.
90 ஆண்டுகள் பழமை வாய்ந்த விமான சட்டம், கடந்த வியாழக்கிழமை அன்று பாரதிய வாயுயான் விதேயக் 2024 என்று மாற்றம் செய்தது தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது.
இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. நிரஞ்சன் ரெட்டி தனது கருத்தை பதிவு செய்தார். குறிப்பாக, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மசோதாக்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டும் என்று அரசியலமைப்பு தேவை இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், 348 (1B) சட்டப்பிரிவையும் அவர் மேற்கோள் காட்டினார். அதிகாரப்பூர்வ பதிவுகள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம் என்றும் அவர் அறிவுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்கள் அல்லது திருத்தங்கள் ஆகியவற்றின் அதிகாரபூர்வமான பதிவுகள், ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு விதி கூறுகிறது.
இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ.(எம்) கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸும் இதே கருத்தை மேற்கொள் காட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
"மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது சட்டப்பிரிவு 348-யை அப்பட்டமாக மீறும் செயலாக இருக்கிறது. மசோதாக்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்" என தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பிரட்டாஸ் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகாரிகா கோஷும் 348வது சட்டப்பிரிவைக் குறிப்பிட்டு மசோதாவின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மசோதாக்கள் இந்தி மயமாக்கப்படுவதாகவும், இந்தி திணிப்பு அரங்கேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"2024-ஆம் ஆண்டில் பா.ஜ.கவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க போன்ற பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் தமது மாநிலங்களில் வெற்றி பெற்றன. இது பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி. தேசிய ஜனநாயக கூட்டணியால் ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை திணிக்கும் நடவடிக்கையை மற்ற மாநிலங்களில் கொண்டு செல்ல முடியாது" என சகாரிகா கோஷ் தெரிவித்துள்ளார்.
“இந்தி திணிப்பை” எதிர்த்த வரலாறு கொண்ட தி.மு.க.வும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியது.
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வரும் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய அரசு இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் மசோதாக்களுக்கு பெயர் வைப்பதாக குற்றஞ்சாட்டிய கனிமொழி, இந்த மொழிகள் புரியாத மக்கள் எப்படி இதனை புரிந்து கொள்வார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
தெலங்கானாவின் செவெல்லா தொகுதி பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரான விஸ்வேஷ்வர் ரெட்டி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியை எதிர்ப்பது என்பது, பிற மொழிகளை வெறுக்கும் கலாசாரத்தின் ஒரு பகுதி என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"இந்தி எதிர்ப்பை தி.மு.க மற்றும் மற்ற கட்சிகள் அனைத்தும் கைவிட வேண்டும். நம் மொழி மற்றும் கலாசாரம் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்தி எதிர்ப்பு என்பது முன்னேற்றத்திற்கான வழி அல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் (பிஎஸ்ஏ) 2023 என குற்றவியல் மசோதாக்களுக்கு பெயரிடப்பட்ட போதும் கூட பல எம்.பி.க்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. குறிப்பாக, “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களின் அதிகாரபூர்வமான பதிவுகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348 பிரிவு கூறுகிறது. முன்மொழியப்பட்ட சட்டத்தின் உரை ஆங்கிலத்தில் இருப்பதால், இது இந்திய அரசியலமைப்பின் 348 வது பிரிவை மீறுவதாக இல்லை” என உள்துறை அமைச்சகம் தரப்பு விளக்கமளித்துள்ளது.
Nikhila Henry
source https://tamil.indianexpress.com/india/hindification-of-laws-old-row-returns-to-house-as-opposition-mps-target-bill-titles-7784261