பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்பட்டு வந்த சூழலில், அது இந்த வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏன் ரூ. 1000 பணம் வழங்கப்படவில்லை? என்று இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், அவர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது.
எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் ரூ. 2100 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 வழங்க முடியவில்லை" என்று அவர் விளக்கம் அளித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thangam-thenarasu-tn-finance-minister-on-not-givign-rs-1000-with-pongal-gift-2025-tamil-news-8604803