சவூதி அரேபியாவில் திடீரென்று கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த நாட்டின் முக்கிய நகரங்களான மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இந்த வெள்ளத்தால் கார்கள் அடித்து செல்லப்பட்டன. பாலைவன தேசமாக சவூதி அரேபியா உள்ளது. இங்கு காடுகள்,புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் இருக்கின்றன.
இருப்பினும் நாட்டின் 95 சதவீதம் நிலம் என்பது பாலைவனமாக தான் இருக்கிறது. இதனால் சவூதி அரேபியாவில் மழை என்பது அதிகம் பெய்யாது. இங்கு வெயில் தான் வெளுத்து வாங்கும்.
குறிப்பாக கோடைக்காலங்களில் வெயில் 43 டிகிரி செல்சியஸை தாண்டி நீடிக்கும்.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 101 மில்லி மீட்டர் என்ற அளவில் மட்டுமே உள்ளது. அதாவது 10 சென்டிமீட்டர் மழை தான் அந்த நாட்டில் சராசரியாக பெய்யும்.
இருப்பினும் அவ்வப்போது திடீரென்று சவூதி அரேபியாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் சவூதி அரேபியாவின் பல இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.
சவூதி அரேபியாவில் முக்கிய நகரங்களாக உள்ள மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக அங்குள்ள பல சாலைகள் மற்றும் சதுக்கங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் அளவுக்கு அதிகமாக பெய்த மழை வெள்ளத்தால் சாலைகள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்த மழை குறித்து சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாயத்துறை அமைச்சரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛சவூதி அரேபியாவில் அதிகபட்சமாக மதினா பிராந்தியத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது.
இங்கு 49.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் ஜெட்டா நகரில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 2"வது அதிகபட்ச மழை பதிவாகி உள்ள இடமாகும்.
அதேபோல் மெக்கா, மதினா, காசிம், தாபூக், வடக்கு எல்லை பகுதிகளில் இன்று காலை வரை மழை என்பது நீடிக்கும். பரவலாக மழை பெய்வதும், பலத்த காற்று, கடல் சீற்றமும் இருக்கும். அதோடு ஆக்ரோஷமான அலைகள் ஏற்படும்.
சில இடங்களில் இடி மின்னல் கூட ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் சார்பில், ‛‛ ஜெட்டா நகரில் மழை என்பது குறையும். ரெட் அலர்ட் என்பது ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் கனமழை என்பது பரவலான மழையாக பெய்யும்’’ என்று கூறப்பட்டுள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தி தொடர்பாளர் உசேன் அல் க்தானி கூறுகையில், ‛‛ஜெட்டா நகரில் பரவலான மழை முதல் சில நேரங்களில் கனமழை பெய்யலாம்.
இதனால் பொதுமக்கள் வானிலை மையத்தின் அறிவிப்பை கவனித்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜெட்டா நகரில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் விமான நிலையம் சார்பில், பயணிகள் தங்களின் விமான பயணத்துக்கு முன்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பி.ரஹ்மான்