திங்கள், 6 ஜனவரி, 2025

ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!

 


ராணிப்பேட்டை மாவட்டம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 50ற்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விஷக்கடிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்காக தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் தான் அரசு
மருத்துவமனைக்கு வருவதாகவும், பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து அரசு
மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் மட்டும் இருப்பதால் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் கூறுகின்றனர்.

இதனால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு காலங்களில் இரவு நேரத்தில் வந்தால் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் சிரமத்திற்கு உள்ளாவதோடு உயிரிழப்பும் ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நெமிலி தாலுகாவாக பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இப்பகுதியில் இந்த மருத்துவமனை விரிவுபடுத்தப்படவில்லை. தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் கிராமப் பகுதிகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நாடி வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் இப்படிப்பட்ட சூழல் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பகுதியில் உள்ள மருத்துவமனையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் எனவும் 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

source https://news7tamil.live/ranipet-people-accuse-the-nurse-of-doing-medicine-because-there-is-no-doctor-at-night.html