வியாழன், 5 பிப்ரவரி, 2026

துணை வேந்தர்கள் நியமன வழக்கு: சென்னை ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

 தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது.

இந்த சட்டத்திருத்தத்தை எதிா்த்து தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமா்வு, துணைவேந்தா்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி அடங்கிய அமா்வு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்போது, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விடுமுறை கால அமர்வு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்ததாவது, இந்த வழக்கில் மாநில அரசின் வாதத்தை முன்வைக்க உரிய கால அவகாசம் வழங்கப்படாத ஒரே காரணத்துக்காக மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்புகிறோம். மாநில அரசு பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடியும் வரை துணை வேந்தர்களை நியமிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vice-chancellor-row-supreme-court-quashes-hc-order-remands-case-back-to-madras-high-court-11076217