வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

கீழடி விவகாரம்: “தொல்லியல் துறை மதிப்பீடு அறிவுப்பூர்வமாக இல்லை; ஏ.ஐ போல இருக்கிறது” - அமர்நாத் ராமகிருஷ்ணா சாடல்

 

Arun Janardhanan

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வுகளை முன்னின்று நடத்திய தொல்லியலாளருக்கும், இந்தியத் தொல்லியல் துறைக்கும் (ஏ.எஸ்.ஐ) இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. தனது அறிக்கை குறித்த உள் மதிப்பீட்டை முறையாக நிராகரித்துள்ள அவர், அசல் ஆவணத்தை மேற்கொண்டு தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய தொல்லியல் துறைக்கு (ஏ.எஸ்.ஐ) அளித்துள்ள விரிவான பதிலில், 5 பேர் கொண்ட உள் குழு தயாரித்த 114 பக்க மதிப்பீட்டு அறிக்கையின் செயல்முறை மற்றும் உள்ளடக்கம் ஆகிய இரண்டையும் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா கேள்வி எழுப்பியுள்ளார். தனது 982 பக்க அகழாய்வு அறிக்கையை ஆய்வு செய்த விதம், நிலைநாட்டப்பட்ட கல்வி நடைமுறையிலிருந்து விலகி இருப்பதாகவும், நடைமுறை ரீதியாக குறைபாடுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியான ஆட்சேபனைகளை முன்வைத்து, ‘கீழடி அகழாய்வு அறிக்கைக்கான (2014-2016) விமர்சன மதிப்பீடு மற்றும் பரிந்துரைகள்’ என்ற தலைப்பிலான அந்த மதிப்பீட்டின் சட்டபூர்வ தன்மையை ராமகிருஷ்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.

“அதைப் பார்த்தாலே... உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று அவர் எழுதியுள்ளார். ஒரு உறுப்பினரின் கையெழுத்து அதில் இல்லை என்பதையும், அவர் "சுற்றுப்பயணத்தில் உள்ளார்" என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். மிக அடிப்படையாக, ஓர் அகழாய்வு ஆய்வாளரின் அறிக்கையின் விளக்கத்தை மறுமதிப்பீடு செய்ய ஓர் உள் குழுவை அமைக்கும் நடவடிக்கையையே முன்னெப்போதும் இல்லாதது என அவர் விவரித்தார். பாரம்பரியமாக, ஏ.எஸ்.ஐ அறிக்கைகள் எழுத்துப் பிழைகள் அல்லது வடிவமைப்பு குறைபாடுகளுக்காக மட்டுமே சரிபார்க்கப்படும், கருத்தியல் ரீதியான மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.

“நேரடியாக களத்தில் அகழாய்வு நடத்திய ஒரு தொல்லியல் ஆய்வாளர் சமர்ப்பித்த அறிக்கையை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்ய ஓர் உள் குழுவை அமைக்கும் நடைமுறை முன்னெப்போதும் இல்லாதது” என்று அமர்நாத் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். முந்தைய அறிக்கைகள் "எழுத்துப் பிழைகள்/ இலக்கணப் பிழைகள், பக்க எண்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் அல்லது அட்டவணைப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள தவறுகளுக்காக" மட்டுமே பரிசோதிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். தனது அசல் அறிக்கையில் குறிப்பிட்ட குறிப்புகளுடன் திருத்தப்பட்ட நகலைப் பெறுவதற்குப் பதிலாக (இதுவே நிலையான விதிமுறை என அவர் வாதிடுகிறார்), பொதுவான அவதானிப்புகள் அடங்கிய தனி 114 பக்க ஆவணம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“எனது அறிக்கையை மேம்படுத்துமாறு என்னிடம் கோருவதற்கு இந்தக் குழு எந்தவொரு தகுந்த காரணத்தையோ அல்லது சரியான விளக்கத்தையோ அளிக்கவில்லை, அதுவும் எனது கண்டுபிடிப்புகளின் மீதே (அவ்வாறு கோருகிறது)” என்று அவர் கூறினார்.

மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி, அறிவுப்பூர்வமான விமர்சனத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் மிகக் கூர்மையான ஒரு பகுதியில், அதன் "உள்ளடக்கம், மொழியின் தன்மை, கட்டமைப்பு மற்றும் ஒொட்டுமொத்த வழங்கல் முறை... அறிவார்ந்த மனித மூளை பயன்படுத்தப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும், ஒரு படி மேலே சென்று, அந்த குறிப்பு “ஏ.ஐ-தொழில்நுட்பத்தின் (செயற்கை நுண்ணறிவு) உதவியுடன் உருவாக்கப்பட்ட தயாரிப்பு போல் தெரிகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். இது மீண்டும் மீண்டும் கூறப்படும் இயந்திரத்தனமான மற்றும் "ஒரே மாதிரியான பாணியில்" இருப்பதாக அவர் விவரித்துள்ளார். இத்தகைய ஒரு செயல்முறை, "இந்தியத் தொல்லியல் துறை இதுவரை வெளியிட்டுள்ள அகழாய்வு அறிக்கைகளின் வரலாற்றிலேயே நடந்ததில்லை" என்று அவர் கூறினார்.

குழுவின் விமர்சனம் அவரது அறிக்கையை "தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் முதிர்ச்சியடையாதது" என்று வகைப்படுத்தியது. வரலாற்றுப் பின்னணி மற்றும் இலக்கியச் சான்றுகளைத் தெளிவான கட்டமைப்பு இன்றி விவரிப்பு கலந்துள்ளதாகவும், கீழடி ஒரு "ஒற்றைப் பண்பாட்டுத் தளம்" என்ற கூற்று உள்ளிட்ட சில விளக்கங்களுக்கு போதுமான அடுக்குமுறைச் சான்றுகளால் ஆதரவு இல்லை என்றும் குழு வாதிட்டது.

ஆனால், இந்த மதிப்பாய்வாளர்கள் ஒருமுறை கூட அந்தத் தளத்தைப் பார்வையிடவில்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணா பதிலடி கொடுத்தார்.

“இந்த உள் குழுவினர் ஒருபோதும் அந்தத் தளத்திற்கு (கீழடி) நேரில் சென்றதில்லை; அந்தத் தளத்தின் பண்பாட்டு உருவாக்கத்தைக் காட்சி ரீதியாகப் பார்த்ததில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது” என்று அவர் எழுதியுள்ளார். அகழாய்வு மூலம் நேரடியாகப் பெறப்பட்ட முதற்கட்ட அறிவை இந்த மதிப்பீடு புறக்கணித்துள்ளதாக அவர் கூறினார்.

கீழடியின் காலவரிசை, தோராயமாக கி.மு. 8-ம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆரம்ப நூற்றாண்டுகள் வரை இருக்கும் என்பதை, "பண்பாட்டுப் படிவுகள், அடுக்குமுறை வரிசைகள் மற்றும் அதன் பொருள்சார் பண்பாடு ஆகிய முதன்மை ஆதாரங்களின்படி, இந்திய தொல்லியல் துறையின் நீண்டகால வழிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றியே" தான் மறுகட்டமைப்பு செய்துள்ளதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்திய தொல்லியல் துறைக்கு அவர் விடுத்த கோரிக்கை மிகத் தெளிவானது: "கண்டுபிடிப்புகளும் முடிவுகளும்... இறுதியானவை. அந்த அறிக்கையை மாற்றுவதற்கு எந்தத் தேவையும் இல்லை அல்லது சரியான காரணமும் இல்லை... அதையே மிக விரைவில் வெளியிடலாம்."

கடந்த பத்தாண்டுகளில், மதுரைக்கு அருகில் அமைந்துள்ள கீழடி, இந்தியாவின் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2014 மற்றும் 2016-க்கு இடையில் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் தொடங்கப்பட்ட அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானங்கள், வடிகால் அமைப்புகள், சுடுமண் கலைப்பொருட்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் தொழில்சார் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இவை சங்க காலத்தில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நகர நாகரிகம் இருந்ததை உணர்த்தின.

இந்தியாவில் ஆரம்பகால நகரமயமாக்கல் பெரும்பாலும் வடப்பகுதியிலேயே குவிந்திருந்தது என்ற பழைய அனுமானங்களுக்கு இந்த கண்டுபிடிப்புகள் சவால் விடுத்தன. அதே காலகட்டத்தில், அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பணி இடமாற்றங்களையும் எதிர்கொள்ளத் தொடங்கினார். இது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தமிழகத்தில் பலர் கருதினர். 2017-ல் அமர்நாத் ராமகிருஷ்ணா திடீரென கீழடியிலிருந்து மாற்றப்பட்டார், அதைத் தொடர்ந்து வந்த இந்திய தொல்லியல் துறையின் அறிக்கைகள் அந்தத் தளத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டன. பின்னர், தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வைத் தொடர்ந்து நடத்தி ஆயிரக்கணக்கான கூடுதல் கலைப்பொருட்களை மீட்டெடுத்தது.

அவர் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருத்தங்களுடன் அதை "மீண்டும் சமர்ப்பிக்குமாறு" இந்திய தொல்லியல் துறை கேட்டுக் கொண்டது. அவர் அதை மறுத்துவிட்டார். இப்போது, உள் மதிப்பீடும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் நிலை இன்னும் வலுவடைந்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/keeladi-excavation-report-standoff-amarnath-ramakrishna-rejects-asi-review-ai-generated-criticism-11080247