வெளிநாட்டில் படிப்பது சிலருக்கு உற்சாகத்தை தந்தாலும், பலருக்கு அது அச்சத்தை கொடுக்கிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, நீங்கள் முடிவெடுக்கும் முன் இந்த 5 காரணிகளைத் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
வானிலை உங்க மனநலனைப் பாதிக்கும் (Weather & Mental Health)
இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் உங்க வெற்றியையே இது தீர்மானிக்கும். உதாரணமாக, மும்பையின் வெப்பத்தில் வளர்ந்த சோனாலி கில், கனடாவின் டொராண்டோ குளிரில் தவித்தார். கடும் குளிரால் ஏற்படும் 'சீசனல் அபெக்டிவ் டிஸார்டர்' உங்க மனநிலையைச் சோர்வடையச் செய்து, படிப்பில் உங்க கவனத்தைக் குறைக்கும். எனவே, ஒரு நகரத்தை தேர்ந்தெடுக்கும் முன் அங்கிருக்கும் தட்பவெப்பநிலை உங்களுக்கு ஒத்து வருமா என்று பாருங்கள்.
நிதி நிலையைத் துல்லியமாகக் கணக்கிடுங்கள் (Financial Assessment)
"கடன் வாங்கி வெளிநாடு செல்லாதீர்கள்" என்பதே எனது நேர்மையான அறிவுரை. தற்போதைய சூழலில் கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுருங்கி வருகிறது. நிறுவனங்கள் பெரும்பாலும் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன. இதனால், பகுதிநேர வேலை செய்து கடனை அடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. வீட்டு வாடகை மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால், பல இந்திய மாணவர்கள் பனிப்பொழிவுக்கு நடுவே ஆபத்தான டெலிவரி வேலைகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
'கறவை மாடுகள்' (The Cash Cow Phenomenon)
மேற்கத்திய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மாணவர்களை வெறும் 'வருமானம் தரும் கறவை மாடுகளாகவே' பார்க்கின்றன. உதாரணத்திற்கு, 2022-ல் மட்டும் கனடாவிற்குச் சர்வதேச மாணவர்கள் மூலம் 37.3 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. எனவே, வெறும் 'வெளிநாட்டுப் படிப்பு' என்ற மோகத்திற்காகச் செல்லாமல், அந்தப் படிப்பால் உங்க எதிர்காலத்திற்கு என்ன பயன் என்பதை உறுதி செய்த பின் சேருங்கள்.
கல்விச் சவாலை குறைத்து மதிப்பிடாதீர்கள் (Academic Difficulty)
இந்தியாவில் நீங்க சிறந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம், ஆனால் மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் மற்றும் பாடத்திட்டம் மிக கடினமானதாக இருக்கும். எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையுடன் செல்லுங்கள். சில மாணவர்கள் காட்டும் தேவையற்ற அகந்தை அவர்களின் நற்பெயரைக் கெடுக்கிறது. உங்க கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் மட்டும் அங்கு நுழையுங்கள்.
படிப்புக்காக செல்லுங்கள், குடியேற்றத்திற்காக அல்ல (Education vs Migration)
இதுதான் மிக முக்கியமான அறிவுரை. வெளிநாட்டில் படிப்பது என்பது அங்கேயே நிரந்தரமாகக் குடியுரிமை (PR) பெறுவதற்கான 'உறுதிச்சீட்டு' அல்ல. அண்மைக்காலமாக கனடா போன்ற நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு எதிராக உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 'குடியுரிமை என்பது ஒரு சலுகையே தவிர, அது உங்கள் உரிமையல்ல' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குடியேறுவது மட்டுமே உங்கள் நோக்கம் என்றால், அது உங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தரும். உங்க வருமானத்தை உயர்த்தக்கூடிய ஒரு படிப்பைத் தேர்ந்தெடுங்கள். இல்லையெனில், உங்க நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் இந்தியாவில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவது புத்திசாலித்தனம்.
source https://tamil.indianexpress.com/education-jobs/before-you-study-abroad-read-this-weather-money-harsh-realities-from-an-insider-11068614





