திங்கள், 2 பிப்ரவரி, 2026

பாசிசத்தை வீழ்த்துவதே நமது இலக்கு

 

பாசிசத்தை வீழ்த்துவதே நமது இலக்கு 1 2 2026

stalin cpim

திராவிடமும் கம்யூனிசமும் ஒன்றுதான்; பாசிசத்தை வீழ்த்துவதே நமது இலக்கு - ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்பு குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும், தமிழ்நாட்டில் இயக்கத்தை வலிமையாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; திராவிட மாடலால் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாக நான் மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

சமத்துவமே பொது இலக்கு

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "கம்யூனிசம் என்பது ஒரு அரசியல் கொள்கை மட்டுமல்ல, அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்க வேண்டிய உணர்வு. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு. திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடைமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான் என்பதால் தான், திராவிடக் கொடிகளில் சிவப்பு நிறம் சரிபாதியாக இடம் பெற்றுள்ளது," என்று குறிப்பிட்டார்.

நல்லக்கண்ணு எனும் சாதனை

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களும் நூற்றாண்டைக் கடந்திருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இது எந்த இயக்கத்திலும் இல்லாத மிகப்பெரிய சாதனை எனப் பாராட்டினார். கருப்பு (திராவிடம்), சிவப்பு (கம்யூனிசம்), நீலம் (அம்பேத்கரியம்) ஆகிய கொள்கைகள் ஒன்றிணைய வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த ஒற்றுமைதான் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையானது. 'திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால் நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்' என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி கூறுவார். அதற்கு சான்றாகத்தான் எனக்கு 'ஸ்டாலின்' என்று பெயர் சூட்டினார். அந்தப் பெயரால் என்னுள் எப்போதும் சிவப்பு உணர்வு குடி கொண்டுள்ளது," என உருக்கமாகப் பேசினார்.

2 நாட்களுக்கு முன்புகூட, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சிராவயலில், உத்தமர் காந்தி - தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்திருக்கும் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். அதேபோன்று, தொடர்ந்து, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காரல் மார்க்ஸ் சிலையை, பிப்.6-ம் நாள் திறந்து வைக்க இருக்கிறேன். இவ்வாறு, உங்களில் ஒருவனாக நானும் - என்னில் பாதியாக நீங்களும் இருப்பதால்தான், ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது என்றார்.

பாசிசத்தை வீழ்த்தும் தோழமை

இறுதியாக உரையாற்றிய அவர், "நமக்குள் இருக்கும் நட்பு என்பது வெறும் தேர்தல் அரசியலுக்கானது மட்டுமல்ல; சாதியவாதம், மதவாதம், வகுப்புவாதம் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரானது. ஜனநாயகச் சக்திகளின் இந்த ஒருமித்த தோழமைதான் பாசிசத்தை வீழ்த்தும்; சர்வாதிகாரத்தை ஒழிக்கும்" என்று சூளுரைத்தார்.

வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி

வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான தேர்தல். தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் அடுக்கடுக்கான துரோகங்களை பா.ஜ.க செய்கிறது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ வழக்குகளைக் காட்டி, மிரட்டி, அமைக்கப்பட்டிருக்கிற தேர்தல் கூட்டணியோடு வந்த பிரதமர் மோடி, அதிமுகவின் பெயரைக்கூட சொல்லவில்லை. ஏனெனில், அதிமுக என்பது தனிக்கட்சி கிடையாது; பாஜகவின் கிளை அமைப்பு.

தமிழ்நாட்டில் தோல்வி உறுதி என்பதால், இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்திருக்கிறது. இந்த நிலையில், பாஜக ஆட்சி எனக் கூறக் கூச்சப்பட்டு, இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறுகின்றனர். எடுத்துக்காட்டுகளாக, போதை மருந்து கடத்தலுக்கு குஜராத், குற்றச் சம்பவங்களுக்கு உத்தர பிரதேசம், மாநில பற்றியெரிய வேண்டுமா மணிப்பூர், பட்டியலின மக்களுக்கு எதிராக அதிக வன்கொடுமைகளுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்.

நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறோம். அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை திமுக உயர்த்தியிருக்கிறது. இங்கு பா.ஜ.க.வுக்கு வேலையே இல்லை. கருத்துக் கணிப்பில் நம்முடைய கூட்டணி 45% ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், நமக்கான ஆதரவு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டில் நாம் பெறப் போகும் வெற்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கக் கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். ஒற்றுமை இருக்குமிடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dravidian-and-communist-movements-share-a-common-goal-of-equality-cm-mk-stalins-speech-at-the-cpi-centenary-celebrations-11065624