திங்கள், 6 ஜனவரி, 2025

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 

gnanasekaran goondas

கைதான ஞானசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டாஸ் பாய்ந்துள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான ஞானசேகரன் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்  குண்டர் சட்டம் பாய்ந்தது. ஞானசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டாஸ் பாய்ந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியில் உலுக்கியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும்போது, தப்பி ஓட முயன்றபோது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார் என சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்து உள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

அதே போல, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவி தவிர்த்து 4 பேர் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களை பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கெனவே, ஞானசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டாஸ் பாய்ந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-student-sexual-harassment-case-gnanasekaran-booked-under-goondas-act-8594022

Related Posts: