முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அப்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து நெல்லைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில், டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலை உள்ளிட்டவற்றை திறந்து வைத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், தொடர்ந்து பாஜக உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,
“மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனைவரையும் வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் எல்லாம் கட்சியில் இணைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்காக பணியாற்றக்கூடிய கட்சி திமுக. ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த கட்சி பாடுபடும் பாடுபடும் என்று கூறி திமுகவை தொடங்கினார்கள். கட்சி தொடங்கிய உடனே நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம், நான்தான் அடுத்த முதலமைச்சர் என கூறுகிறார்கள்.
அவை எல்லாம் மக்களிடையே எடுபடாது. யார் மக்களுக்காக பணியாற்றுவார்கள் என்று மக்களுக்கு தெரியும். எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 1957-ல் முதன்முதலில் போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றோம். அதன்பிறகு 50 பேர் வெற்றி பெற்றோம். தொடர்ந்து, 1967ல் ஆட்சிப்பொறுப்பேற்றோம். அவ்வாறு படிப்படியாக முன்னேறி 6 முறை ஆட்சி செய்துள்ளோம். அடுத்ததாக 7 முறையும் ஆட்சிப்பொறுப்பேற்க மக்கள் முடிவு செய்துள்ளனர்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
source https://news7tamil.live/people-will-not-accept-the-idea-of-saying-i-am-the-chief-minister-as-soon-as-the-party-is-launched-chief-minister-m-k-stalins-speech.html