/indian-express-tamil/media/media_files/2025/02/07/wUwPAZ8oxinaPqHIjH5E.jpg)
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மகப்பேறு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பது இல்லை என பல முறை புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு நேரத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மகப்பேறு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையின் கதவு மூடப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாதது தெரிய வந்தது.
அதன்பேரில், மருத்துவ பணிகள் இணை இயக்குநருக்கு அவசர உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். அதில், மருத்துவமனையின் பணியாளர் முறை எவ்வாறு செயல்படுகிறது? என்றும், இரவு நேரங்களில் கண்காணிப்பு எப்படி செய்யப்படுகிறது? என்றும் பல்வேறு கேள்விகளை மாவட்ட ஆட்சியர் எழுப்பினார்.
இவற்றை விரிவாக விசாரித்து இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/virudhunagar-collector-inspection-at-hospital-8699837