செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்ட பால் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

 

Arokya Milk

தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆரோக்கியா பால் விலை உயர்த்தப்பட்ட சம்பவம் நுகர்வோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக ஆவின் நிறுவனம் பால் விநியோகம் செய்து வருகிறது. குறிப்பாக, பால் மட்டுமின்றி பால் சார்ந்த பல்வேறு பொருட்களும் இந்நிறுவனம் மூலம் விற்பனையாகி வருகிறது. ஏராளமான மக்கள் ஆவின் நிறுவன பொருட்களை வாங்குகின்றனர்.

இதேபோல், ஆவின் மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க வகையிலான வாடிக்கையாளர்களை கொண்டது ஆரோக்கியா நிறுவனம். இந்நிறுவனம் சார்பாகவும் பல்வேறு தரங்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழலில் ஆரோக்கியா நிறுவனமானது, தங்கள் பால் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. அந்நிறுவனத்தின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பாக்கெட் பால் விலை இன்று முதல் ரூ. 71-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரை லிட்டர் பாக்கெட் பாலின் விலையையும் ரூ. 37-ல் இருந்து ரூ. 38-ஆக உயர்த்தி ஆரோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பால் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/arokya-milk-price-sudden-hike-8688103