சனி, 20 செப்டம்பர், 2025

வால்பாறை செல்ல நவம்பர் 1 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு

 

HC valparai board

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, உதகமண்டலம் மற்றும் கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் முறை அமலில் உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்குச் செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வனப் பகுதிகள், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஏற்கெனவே, உதகமண்டலம் மற்றும் கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர்கள் தரப்பில், உதகை மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் இருப்பதால், அதிகமான சுற்றுலாப் பயணிகள் தற்போது வால்பாறைக்குச் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய வனப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

எனவே, வால்பாறைக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, வாகனங்களில் நெகிழிப் பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே அமர்வு, உதகை மற்றும் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் நிபுணர் குழுக்களின் இடைக்கால அறிக்கையையும் ஏற்றுக்கொண்டது. 

இந்த அறிக்கை, உதகையில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பரிந்துரைத்தது. இந்த ஆய்வு குறித்த இறுதி அறிக்கை டிசம்பருக்குள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-e-pass-mandatory-to-visit-valparai-from-november-1st-10481153


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-e-pass-mandatory-to-visit-valparai-from-november-1st-10481153