அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: 14 1 2026
/indian-express-tamil/media/media_files/2026/01/14/iran-protests-2026-01-14-20-41-21.jpg)
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: ஈரானை விட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, அரசு மற்றும் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஈரானின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
போராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே, போராட்டம் மற்றும் வன்முறைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 571 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 18 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் தங்கியுள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அவசர ஆலோசனைக் குறிப்பில், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் உட்பட, தற்போது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்த அறிவிப்பு ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், புனிதப் பயணிகள் (Pilgrims) மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும்.
ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போராட்டங்களில் இந்தியர்கள் எக்காரணம் கொண்டும் பங்கேற்க வேண்டாம் என்றும், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்தியத் தூதரகத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு "உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி, ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.





