திங்கள், 9 நவம்பர், 2026

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் ஏன் நாட்டை விட்டு வெளியேறவில்லை? சோனியா தகவல்

 source https://tamil.indianexpress.com/india/india-was-my-home-my-childrens-home-sonia-gandhi-on-why-she-never-left-after-rajivs-assassination-12793254


sonia

சோனியா காந்தியின் இந்திய அரசியல் நுழைவு என்பது திட்டமிட்ட ஒன்றோ அல்லது அரசியல் ஆசையால் உந்தப்பட்ட ஒன்றோ அல்ல. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றின் அங்கமாக மாறியபோதிலும், தனது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியுடன் ஒரு தனிப்பட்ட வாழக்கையை வாழ்வதிலேயே அவர் பல ஆண்டுகள் நிறைவு கண்டிருந்தார்.

ஆனால், தனது மாமியார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-ல் நடந்த ராஜீவின் படுகொலை, இறுதியில் அவரது வாழ்க்கையின் பாதையை மாற்றி, அவரை காங்கிரஸின் தலைமைப் பொறுப்பிற்குள் கொண்டு வந்தது. தனது நினைவுக் குறிப்பான ‘பிளாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) வெளியீட்டிற்கு முன்னதாக தி கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 79 வயதான மூத்த காங்கிரஸ் தலைவரான சோனியா, கேம்பிரிட்ஜில் ராஜீவைச் சந்தித்தது, இந்திரா காந்தியுடனான அவரது உறவு, அவரது வாழ்க்கையை வடிவமைத்த தனிப்பட்ட துயரங்கள் மற்றும் இறுதியில் அவர் காங்கிரஸின் பொறுப்பை ஏற்க வழிவகுத்த சூழல்கள் குறித்து பேசியுள்ளார்.

அது ஒரு காதல் மின்னல் தாக்கிய தருணம்

1960-களில், 18 வயதில் கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு மொழிப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ராஜீவை முதன்முதலில் சந்தித்ததை நினைவுகூர்ந்த சோனியா, அது ஒரு உடனடி ஈர்ப்பு என்று விவரித்தார். இருவரும் ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்ததாக அவர் பேட்டியில் கூறினார்.

ராஜீவின் தோற்றத்திற்காக மட்டுமின்றி, அவரது கண்கள் அவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்தியதை உணர்ந்ததாலும் தான் அவரிடம் ஈர்க்கப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். அவரை அன்பானவர், ஆறுதலளிப்பவர் மற்றும் அக்கறையுள்ளவர் என்று விவரித்தார். அக்காலத்தில், தான் காதலித்த இளைஞர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பேரன் என்றும், நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த இந்திரா காந்தியின் மகன் என்றும் தனக்குத் தெரியாது என்று சோனியா கூறினார்.

சோனியா 1968-ல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். இத்தம்பதியினர் தொடக்கத்தில் அப்போதைய பிரதமராகப் பணியாற்றி வந்த இந்திரா காந்தியுடன் இணைந்து வாழ்ந்தனர். தனது மாமியாருடனான உறவை நினைவுகூர்ந்த சோனியா, இந்திராவின் கம்பீரமான பொது ஆளுமையைக் கண்டு தான் தொடக்கத்தில் அச்சமடைந்ததாக தி கார்டியனிடம் கூறினார்.

இருப்பினும், செய்திதாள்களில் அடிக்கடி காட்டப்பட்ட படத்திலிருந்து வீட்டிலிருந்த இந்திராவின் படம் வேறுபட்டிருந்தது என்று அவர் கூறினார். "செய்திதாள்களில் அவர் கடுமையானவராக அல்லது கொடூரமானவராக சித்திரிக்கப்பட்டார், ஆனால் வீட்டில் அவர் மற்ற தாயைப் போலத்தான் இருந்தார்" என்று சோனியா கூறினார்.

இந்திரா காந்தி இதயத்தால் ஒரு ஜனநாயகவாதி

1975-ல் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது குறித்து பேசிய சோனியா, முதன்முதலில் பிரதமரானபோது தான் பயந்ததாக இந்திரா ஒருமுறை தன்னிடம் கூறியதை நினைவுகூர்ந்தார். தனது மாமியாருக்கு கோபம் வரக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அதே வேளையில், அந்தப் பொறுப்போடு வந்த அழுத்தத்தையும் தனிமையையும் தான் பார்த்திருப்பதாக சோனியா கூறினார். இந்திரா இரவும் பகலும் உழைப்பதையும், தொடர்ந்து தாக்குதல்களையும் அரசியல் அழுத்தங்களையும் எதிர்கொள்வதையும் தான் பார்த்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

பல ஆண்டுகளாக, ராஜீவுடனான சோனியாவின் வாழ்க்கை அரசியல் களத்திலிருந்து பெருமளவு விலகியே இருந்தது. ராஜீவ் ஒரு வணிக விமான ஓட்டியாகப் பணியாற்றி வந்தார். மேலும் சோனியா இந்திய வாழ்க்கைக்கு படிப்படியாக பழகிய நிலையில், இத்தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளான ராகுல் மற்றும் பிரியங்காவை வளர்த்தனர். அக்டோபர் 1984-ல், புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டபோது அது மாறியது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, தனது மாமியார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டதை சோனியா நினைவுகூர்ந்தார்.

தி கார்டியனிடம் தனது அனுபவத்தை கூறிய சோனியா, மருத்துவமனைக்கு விரைந்து செல்லும்போது இந்திராவின் ரத்தம் சிந்தும் உடலைப் பிடித்துக்கொண்டிருந்ததை விவரித்தார். அந்தப் பயணத்தின் போது தனது மாமியார் தனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று பயந்ததாகவும் கூறினார்.

ராஜீவ் காந்தி பிரதமரானபோது

இந்த துயரம் ராஜீவுக்கு எதிர்பாராத அரசியல் பொறுப்பை கொண்டு வந்தது. இந்திராவின் உடல் மருத்துவமனையில் இருந்தபோதே, தான் பிரதமராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக ராஜீவ் தன்னிடம் தெரிவித்ததை சோனியா நினைவுகூர்ந்தார். அரசியலை விட்டு விலகி இருக்குமாறு தான் அவரிடம் கெஞ்சியதாகவும், அந்த தருணம் என் இதயத்தில் கத்தி இறங்குவது போன்றது என்றும் விவரித்தார்.

இருப்பினும், தனது தாயாரின் படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் அரசாங்கத்தின் தலைமையை ஏற்றார். குடும்பத்தை பயம் கவ்விக்கொண்டதாகவும், பாதுகாப்பு என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு நிரந்தரமான அம்சமாக மாறியதாகவும், அவர்களின் குழந்தைகள் முன்பு அனுபவித்த சுதந்திரத்தை பெருமளவில் இழந்ததாகவும் சோனியா கூறினார்.

ராஜீவ் நிகழ்ச்சியிலிருந்து தாமதமாகத் திரும்பும் போதெல்லாம் தான் எப்போதும் கவலையடைந்ததாக அவர் கூறினார். அடுத்து அவர் கொல்லப்படுவார் என்பதுதான் தனது முதன்மையான பயமாக இருந்ததாக அவர் நேர்காணலில் தெரிவித்தார். அந்த பயம் மே 21, 1991 அன்று நிஜமானது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது   தற்கொலைப்படை தீவிரவாதியால் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின் இத்தாலிக்கு திரும்புமாறு அவரது சகோதரி வலியுறுத்திய போதிலும், இந்தியாவை விட்டு வெளியேறுவது ஒருபோதும் ஒரு தேர்வாக இருக்கவில்லை என்று சோனியா கூறினார். "இந்தியா என் வீடு, என் குழந்தைகளின் வீடு" என்று அவர் கூறினார்.

அந்த படுகொலை அவரை நிலைகுலையச் செய்தது. நேர்காணலின் போது உடனிருந்த அவரது மகள் பிரியங்கா, சோனியா, மோசார்ட்டின் ரெக்வியம் இசையைக் கேட்டபடி இருட்டில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை நினைவுகூர்ந்தார். ராஜீவ் தன்னிமிடமிருந்து பறிக்கப்பட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள போராடியதால், தான் அனுபவித்த கோபத்தையும் துயரத்தையும் சோனியாவும் பேசினார்.

தாயக்கத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் வரை

ராஜீவின் படுகொலைக்குப் பிறகு பல ஆண்டுகள் சோனியா தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இருப்பினும், காங்கிரஸ் தலைவர்களுக்கான நெருக்கடியையும், கட்சி பிளவுபடும் சாத்தியத்தையும் எதிர்கொண்டதால் கட்சிக்கு புத்துயிரூட்ட அவர் முன்வர வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. அவர் இறுதியில் 1998-ல் காங்கிரஸ் தலைவராக சம்மதித்தார். இந்த முடிவு எந்தவொரு தனிப்பட்ட அரசியல் ஆசையினாலும் வரவில்லை.  தனது மறைந்த கணவர் மீதான கடமை உணர்வால் உந்தப்பட்டது என்று அவர் தி கார்டியனிடம் கூறினார்.

இந்த மாற்றம் எளிதானதாக இருக்கவில்லை. சோனியா தனது இயல்பான கூச்ச சுபாவத்தை கடந்து தனது மூன்றாவது மொழியான இந்தியில் அரசியல் கூட்டங்களில் பேச வேண்டியிருந்தது. மேலும் அவர் நீண்டகாலமாக சந்தேகத்துடன் பார்த்த ஒரு அரசியல் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது ஆரம்பக்கட்ட தயக்கத்தையும் மீறி, 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் சோனியா பிரதமராக மறுத்துவிட்டார். இந்த முடிவு அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

"நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்பதில் தெளிவாக இருந்தேன்" என்று அவர் தி கார்டியனிடம் கூறினார். "அது நான் அல்ல" என்றும் அவர் மேலும் கூறினார். அதற்குப் பதிலாக அவர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமையில் தொடர்ந்து இருந்தார். 2017-ல் ராகுல் காந்தி அவருக்குப் பின் பதவியேற்கும் வரை, கட்சியின் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். நவம்பர் 10 அன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ள சோனியாவின் நினைவுக் குறிப்பு, இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கான அவரது பயணம் மற்றும் அவரது பொது வாழ்க்கையை வடிவமைத்த தனிப்பட்ட அனுபவங்களை ஆய்வு செய்கிறது.