வெள்ளி, 6 நவம்பர், 2026

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு; ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் புதிய சிக்கல்?

 source https://tamil.indianexpress.com/explained/us-midterm-election-results-crude-oil-prices-india-russia-import-impact-12787325

\trump explained

நவம்பர் 4, 2026-ல் வெள்ளை மாளிகையின் வரவேற்பு அரங்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பார்வையிடுகிறார். Photograph: (Photo AP)

எழுதியவர்: சுகல்ப் சர்மா

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற பிரமாண்ட வெற்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் அதன் வசமாக்கியுள்ளது. இது ஈரான் மோதலில் ஒரு சாத்தியமான தூதரக அமைதிப் பேச்சுவார்த்தைக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எரிபொருள் போக்குவரத்தைச் சீராக்கி, உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஒரு தொடர்ச்சியான சரிவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகவும், நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகவும் இருக்கும் இந்தியாவிற்கு, குறைந்த எண்ணெய் விலையானது நாட்டின் அதிகரித்து வரும் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்து, வெளிப்புற பணவீக்க அழுத்தத்தைத் தணித்து, எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் நிதியை மேம்படுத்துவதன் மூலம் கணிசமான பொருளாதார நிவாரணத்தை வழங்கும்.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் புதுடெல்லிக்கு ஒரு சங்கடமான சூழலையும் ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம், ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவதை டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகக் கடினமாக்கலாம். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவுக்கு அதிக நெருக்கடியையும் இழப்பையும் ஏற்படுத்த வழிவகுக்கும். இத்தகைய எந்தவொரு நடவடிக்கையும், இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆதாரமாக விளங்கும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை பேரல் ஒன்றுக்கு 8.7% குறைந்து 94.62 அமெரிக்க டாலராகச் சரிந்தது. வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, எண்ணெய் விலைகள் புதன்கிழமை அளவிலேயே பெரிய மாற்றமின்றி நிலைகொண்டிருந்தன.

இருப்பினும், இவை இன்னும் ஆரம்ப நாட்கள் மட்டுமே. இத்தகைய நம்பிக்கைகளுக்கு மத்தியிலும், போரின் முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியுறவுக் கொள்கையின் மீது கணிசமான அதிகாரத்தைத் தக்கவைத்துள்ளார். மேலும் இந்தத் தேர்தல் பின்னடைவு, மேற்கு ஆசிய மோதலில் இன்னும் தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்க அவரைத் தூண்டுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

எரிசக்தி சந்தையின் உடனடி கவலை: ஈரான் மோதல்

சந்தைப் பங்கேற்பாளர்களும் நிபுணர்களும், தேர்தலில் குடியரசுக் கட்சியின் மோசமான செயல்பாடு, போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனுக்கு அழுத்தங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஈரான் போர் குறித்து குடியரசுக் கட்சிக்குள்ளேயே வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தேர்தல் தோல்விக்கு போரே காரணம் என்று கூறி, டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை நிலப்பாட்டிலிருந்து பகிரங்கமாக விலகினார்.

இது குறித்து 'ரைஸ்டாட் எனர்ஜி' நிறுவனம் தெரிவிக்கையில்:

“ராணுவத் தாக்குதல்கள், முற்றுகைகள் மற்றும் தடைகளுக்கான உரிமங்கள் மீது அதிபர் முழு தன்னுரிமை அதிகாரத்தைக் கொண்டுள்ளார். எந்தவொரு போர் அதிகாரத் தீர்மானமும் இதுவரை அதிபரின் வீட்டோ அதிகாரத்தை மீறியதில்லை. இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மை விளிம்புநிலையானது அதிபரின் வீட்டோவை மீறும் அளவுக்குப் பெரியதாக இருக்காது. ஆனால், ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தால் செய்ய முடிந்தது என்னவென்றால், போரைத் தீவிரப்படுத்துவதைக் கணிசமாகச் செலவுமிக்கதாக மாற்றுவதுதான்: இரு அவைகளும் தீர்மானங்களை நிறைவேற்றலாம், போர்ச் செலவுகளுக்கு நிபந்தனைகளை விதிக்கலாம் மற்றும் முக்கிய அதிகாரிகளின் நியமனங்களைத் தடுத்து நிறுத்தலாம். போருக்கான நிதி மற்றும் நியமனங்கள் இப்போது ஒரு எதிரெதிர் பெரும்பான்மைக்கு உட்பட்டுள்ளதால், அடுத்த கட்டத் தாக்குதல்களை நடத்துவதை விட, ஹோர்முஸ் ஒப்பந்தத்தைப் பின்தொடர டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிக நிறுவன ரீதியிலான அழுத்தம் ஏற்படுகிறது.”

அபுதாபியைச் சேர்ந்த எரிசக்தி பகுப்பாய்வாளர் நடாலியா கடோனா எச்சரிக்கையில், மேற்கு ஆசியாவில் பகைமை முடிவுக்கு வருவது மற்றும் எரிசக்தி ஓட்டம் இயல்புநிலைக்குத் திரும்புவது குறித்து அதிக நம்பிக்கை அதிகரித்து வந்தாலும், அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருப்பதில் ஆபத்து உள்ளது என்று கூறினார்.

“போரின் அரசியல் விலையை டிரம்ப் ஒப்புக்கொண்டார், ஆனால் அதை முன்னோக்கி கொண்டு செல்லும் முடிவை அவர் இன்னமும் நியாயப்படுத்தினார். வாக்கெடுப்புக்கு அடுத்த நாளான நவம்பர் 4-ம் தேதி, ஈரானிய எண்ணெயைச் சுமந்து செல்லும் டேங்கர் கப்பல்களுக்குப் போலி கொடிகளைப் பெற உதவிய நெட்வொர்க் மீது வாஷிங்டன் தடை விதித்தது. ஜனநாயகக் கட்சியினர் ஜனவரி 3-ல் பொறுப்பேற்றவுடன் கடுமையான கேள்விகளைக் கேட்கத் தொடங்கலாம் மற்றும் புதிய ராணுவ நிதியைப் பெறுவதைக் கடினமாக்கலாம். ஆனால் அதுவரை, அழுத்தத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பு டிரம்பிற்கு இன்னமும் உள்ளது, மேலும் இந்த முறை அவர் கணிக்கக்கூடியவராகவும் கவனமாகவும் மாறுவார் என்று நம்ப எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

எண்ணெய் விலை குறைந்தால் இந்தியாவிற்கு லாபம்

இந்தியாவைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணை வழியிலான எரிசக்தி போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல், எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அதன் நீண்டகால பலவீனத்தையும், அந்த இறக்குமதியில் கணிசமான பகுதி மேற்கு ஆசியாவில் குவிந்திருப்பதையும் வெளிப்படுத்தியது.

போருக்கு முன்பு, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40%, எல்.என்.ஜி இறக்குமதியில் 60% மற்றும் எல்.பி.ஜி இறக்குமதியில் 90% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வழக்கமாக வந்தன. நாட்டின் இறக்குமதிச் சார்பு எண்ணெய்க்கு 88%-க்கும் அதிகமாகவும், எல்.பி.ஜி-க்கு 60%-ஆகவும், இயற்கை வாயுவிற்குச் சுமார் 50%-ஆகவும் உள்ளது.

இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் விநியோகஸ்தர்களைப் பன்முகப்படுத்தியிருந்தாலும் (ரஷ்யா மிகப்பெரிய விநியோகஸ்தராக மாறியுள்ளது), வளைகுடா கச்சா எண்ணெய் நாட்டின் எரிசக்திக் கலவையில் தொடர்ந்து மையமாக உள்ளது. மேலும், போரின் ஆரம்ப சில மாதங்களில் இருந்த மோசமான நிலைகளுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய மாதங்களில் மேற்கு ஆசியக் கச்சா எண்ணெய் கிடைப்பது கணிசமாக மேம்பட்டுள்ள போதிலும், அப்பிராந்தியம் வழியிலான கப்பல் போக்குவரத்தின் போர் அபாயக் கட்டணங்கள் காரணமாக அந்த பேரல்கள் இன்னும் மிகவும் விலையுயர்ந்ததாகவே இருக்கின்றன.

“இந்தியாவைப் பொறுத்தவரை, வளைகுடா பதற்றங்கள் தணிவதிலிருந்தே தெளிவான சாதகமான சூழல் உருவாகும். அது விநியோகத்தை நம்பகமானதாக மாற்றுவதுடன், டேங்கர் சரக்குக் கட்டணத்தையும் குறைக்கும்” என்று கடோனா கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அரசியல் சமிக்ஞைகளுக்கும் உண்மையான கப்பல் போக்குவரத்து நிலைகளுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் முக்கியமானது. டேங்கர் இயக்கங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி, மேலும் தடங்கல்கள் ஏற்படும் அச்சுறுத்தல் குறையும் வரை, அடிப்படையான கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தாலும் மற்றும் போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இந்தியா நிச்சயமற்ற தன்மையையும், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அதிக இறக்குமதி விலையையுமே தொடர்ந்து எதிர்கொள்ளும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டுக்கு ஆண்டு 46.4% உயர்ந்து 90.6 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தற்காலிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த நிதியாண்டு முழுவதிலும் எண்ணெய் இறக்குமதிச் செலவு சுமார் 135 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் எல்.என்.ஜி இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 23.2% உயர்ந்து 8.5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியா ஆண்டிற்கு 1.8 முதல் 2 பில்லியன் பேரல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது, மேலும் எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 1 அமெரிக்க டாலர் உயர்வும் அதன் வருடாந்திர எண்ணெய் இறக்குமதிச் செலவை 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்துகிறது. நோமுரா நிறுவனத்தின் மார்ச் மாத அறிக்கையின்படி, அதிக எண்ணெய் விலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மூன்று ஆசியப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும், எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 10% உயர்வும் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (சி.ஏ.டி) ஜி.டி.பி-யில் 0.4% விரிவுபடுத்துகிறது என்றும் அது கூறியுள்ளது. நாட்டின் பொருட்கள் இறக்குமதியில் கச்சா எண்ணெய் மட்டுமே மிகப்பபெரிய பங்கைக் கொண்டுள்ளது.

ரஷ்ய எரிசக்தி மீதான இடைத்தேர்தல் முடிவுகளின் சாத்தியமான தாக்கங்கள்

குறைந்த உலகளாவிய எண்ணெய் விலைகள் இந்தியாவிற்குப் பயனளிக்கும் அதே வேளையில், ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான அமெரிக்கத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் புதுடெல்லிக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். செப்டம்பர் மாதத்தில், இந்தியா நாளொன்றுக்கு 1.9 மில்லியன் பேரல்கள் ரஷ்யக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இது அந்த மாதத்தின் நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 35%-க்கும் அதிகமான பங்காகும் என்று 'கிப்ளர்' தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய மாதங்களில், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அளவு இன்னும் அதிகமாக இருந்தது (ஜூலையில் நாளொன்றுக்கு 2.8 மில்லியன் பேரல்கள் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது).

உக்ரைன் போர் வெடித்த பிறகே ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உண்மையிலேயே வேகம் எடுத்தது. பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யக் கச்சா எண்ணெயைப் புறக்கணித்ததால், மாஸ்கோ விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி விலையில் எண்ணெயை வழங்கத் தொடங்கியது. இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இதனால், முன்பு இந்தியாவிற்கு ஒரு சிறிய விநியோகஸ்தராக இருந்த ரஷ்யா, பாரம்பரிய மேற்கு ஆசிய விநியோகஸ்தர்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆதாரமாக உருவெடுத்தது.

ரஷ்யக் கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்குவது தொடர்பாக டிரம்பின் நிர்வாகம் இந்தியாவைத் தொடர்ந்து குறி வைத்திருந்த போதிலும், மாஸ்கோ மற்றும் ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி மீதான வாஷிங்டனின் நிலைப்பாடு சமீபத்திய மாதங்களில் கணிசமாகத் தளர்ந்தது. சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவும் மாஸ்கோவிலிருந்து டீசலை வாங்கும் என்று கூறி, ரஷ்ய டீசல் ஏற்றுமதி மீதான தடைகளை டிரம்ப் தளர்த்தினார். ரஷ்ய எரிசக்தியை அதிகம் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 100% வரை வரிகளை விதிக்கும் 'லின்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டத்தின்' சில முக்கிய விதிகளையும் அவர் விலக்கினார்.

ஆனால், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்துவதற்காக மாஸ்கோவை நோக்கிய கடுமையான அணுகுமுறையை வலியுறுத்தக்கூடும். ரஷ்ய எண்ணெயின் வணிக ரீதியிலான ஈர்ப்பு என்பது வெறும் கச்சா எண்ணெயின் விலையை மட்டும் பொறுத்தது அல்ல. பணப் பரிவர்த்தனை ஏற்பாடுகள், கப்பல்கள் கிடைப்பது, காப்பீட்டுச் செலவுகள் மற்றும் தடைகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவை அனைத்தும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான ரஷ்ய எண்ணெயின் இறுதி விலையைத் தீர்மானிக்கின்றன.

டிரம்ப் நிர்வாகம் வழங்கிய தற்போதைய தடைத் தளர்வுகளை மறுபரிசீலனை செய்யவும், ரஷ்ய எரிசக்தி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கப்பல் நெட்வொர்க்குகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஜனநாயகக் கட்சியினர் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். கடுமையான தடைகள் இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, டேங்கர் கப்பல்களை ஏற்பாடு செய்வது அல்லது ரஷ்யப் பொருட்களுக்குக் காப்பீடு பெறுவதைக் கடினமாகவும் செலவுமிக்கதாகவும் மாற்றக்கூடும்.

“ரஷ்ய எண்ணெய் விஷயத்தில், கிரஹாம் சட்ட வரி விலக்கிற்கு குறிப்பிட்ட காலாவதி தேதி எதுவும் இல்லை, தற்போதைய சட்டத்தின் கீழ் அதை நீக்குவதா இல்லையா என்பதை அதிபரின் நிர்வாகமே தீர்மானிக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் நேரடியாக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது கடுமையான தடைகளை வலியுறுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அது ரஷ்ய பேரல்களைத் தள்ளுபடி விலையிலேயே வைத்திருக்கும், ஆனால் பணப் பரிவர்த்தனைகளை ஏற்பாடு செய்வது கடினமாகவும், கருங்கடல் சரக்குக் கட்டணம் ஏற்கனவே செலவுமிக்கதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். எனவே ஏற்றுமதித் துறைமுகத்தில் மலிவான ரஷ்ய பேரல் கிடைத்தாலும், அது இந்தியச் சுத்திகரிப்பு நிலையங்களை வந்து அடையும் போது பெரிய சேமிப்பை வழங்காது” என்று கடோனா கூறினார்.