/indian-express-tamil/media/media_files/2026/11/07/ex-creamy-layer-supreme-court_expl-law-2026-11-07-10-59-39.webp)
எழுதியவர்:அமால் ஷேக்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓ.பி.சி (OBC) ) "கிரிமி லேயர்" (கிரீமி அடுக்கு) வரம்பு குறித்து மார்ச் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு பொருந்தாது, ஆனால், நிலுவையில் உள்ள 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) பணி ஒதுக்கீட்டிற்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இடஒதுக்கீடு முறையில், ஓ.பி.சி (OBC) ) பிரிவில் உள்ள பொருளாதார ரீதியாக வசதிபடைத்த, சமூகத்தில் முன்னேறிய வகுப்பினரை குறிக்க "கிரிமி லேயர்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கிரிமி லேயரில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஓ.பி.சி இடஒதுக்கீட்டுச் சலுகைகள் பெற உரிமை இல்லை.
இது குறித்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓ.பி.சி (OBC) கிரிமி லேயரைத் தீர்மானிக்க வருமானம் மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியாது என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், அரசுத் துறை ஊழியர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தகுதிச் சமநிலை கேள்விக்கும் தீர்வு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பின் கால வரம்பு (நடைமுறைப்படுத்தும் காலம்) குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு கோரியது. இதன் காரணமாக நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, "11.03.2026 நாளிட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கொள்கை, அதற்கு முன் ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகள் அல்லது பணி நியமனங்களை மீண்டும் திறப்பதற்கு ஒரு காரணமாக அமையாது. மேலும், "பணி ஒதுக்கீட்டு செயல்முறை நிலுவையில் உள்ளதால், மார்ச் மாதத் தீர்ப்பை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதற்கு எந்தவிதமான வலுவான அல்லது நியாயமான காரணமும் இல்லை" என்றும் கூறியது. பதவிகளின் தகுதிச் சமநிலையை நிர்ணயிக்க மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரியது. ஆனால் அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், தீர்ப்பை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்தது.
ஓ.பி.சி (OBC) கிரிமி லேயர் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மார்ச் 2026 தீர்ப்பு கூறியது என்ன?
இந்த வழக்கு, 1993 செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட அலுவலகக் குறிப்பு ஆணையிலிருந்து (OM) எழுந்தது. அந்த குறிப்பாணை, ஓ.பி.சி (OBC) பிரிவினரில் "கிரிமி லேயர்" வரம்பிற்குள் வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்குவதற்கான அளவுகோல்களை வகுத்தது. வருமானம்/சொத்து சோதனையின் பிரிவு 4 (IV)-ன் கீழ், சம்பளம் மற்றும் விவசாய நிலங்கள் தவிர மற்ற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் விலக்கப்பட்டுள்ளது.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அக்டோபர் 2004-ல் எழுதிய கடிதத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பொது வேலைவாய்ப்புகளில் உள்ள பதவிகளின் "சமநிலை" தீர்மானிக்கப்படாத இடங்களில், அந்தச் சம்பளங்கள் தனியாகக் கணக்கிடப்படும் என்று தெளிவுபடுத்தியது. அது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டினால், அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயரின் கீழ் வருவார்கள்.
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், "அடிப்படை கொள்கையில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒரு விளக்கக் கடிதம் மூலம் புதிதாகக் கொண்டுவர முடியாது" என்றும், சம்பள வருமானம் மட்டுமே கிரிமி லேயர் நிலையைக் தீர்மானிக்கும் ஒரே அளவுகோலாக மாற முடியாது என்றும் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், பதவிகளில் உள்ள அரசு ஊழியர்களின் குழந்தைகளிலிருந்து, பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களின் குழந்தைகளை வித்தியாசமாக நடத்துவது "பாதகமான பாகுபாடு" (hostile discrimination) என்றும் நீதிமன்றம் கூறியது.
அதன்பின்னர், இந்த விதிகளின் அடிப்படையில் 6 மாதங்களுக்குள் நடவடிக்கைகளை அமல்படுத்துமாறும், கிரிமி லேயர் அல்லாத பிரிவின் கீழ் வரும் தகுதியுள்ள நபர்களுக்கு தேவையான கூடுதல் பதவிகளை (supernumerary posts) உருவாக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசுக்கு விளக்கம் தேவைப்பட்டது ஏன்?
மார்ச் மாதத் தீர்ப்பிற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் சி.எஸ்.இ (CSE) 2025-க்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், இத்தீர்ப்பை முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது, முந்தைய சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உட்பட ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகள் மற்றும் பணி ஒதுக்கீடுகளைப் பாதிக்கும் என்று கூறியது.
மேலும் இந்த மனுவில் கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 3.70 லட்சம் ஓ.பி.சி (OBC) காலிப்பணியிடங்கள் உட்பட, 6.69 லட்சத்திற்கும் அதிகமான இடஒதுக்கீட்டு காலிப்பணியிடங்களை அரசு சுட்டிக்காட்டியது. நீதிமன்றம் தனது தீர்ப்பை எதிர்கால வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் வரம்பிடலாம் என்ற விதியின் கீழ், இந்தத் தீர்ப்பு எதிர்காலத்திற்கு மட்டும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பியதுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கலந்தாலோசித்து பதவிகளின் சமநிலையை நிறுவ இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரியது.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
இந்த விவகாரத்தில் 1993 அலுவலகக் குறிப்பாணை (OM) மற்றும் 2004 கடிதத்திற்கான விளக்கம், மற்றும் "சம்பள வருமானத்தின் அடிப்படையில் தானாகவே கிரிமி லேயரில் சேர்ப்பதை நிராகரித்தல்" ஆகியவை மறுபரிசீலனைக்கு உட்பட்டவை அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், விளக்கம் கேட்பதன் போர்வையில் தீர்ப்பின் தகுதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு "தந்திரமாக" இந்த மனுக்களைப் பயன்படுத்த முடியாது என்றும் கூறியது.
தொடர்ந்து அமர்வு கூறுகையில், மூல வழக்குகள் நீதிமன்றத்தின் முன் இருந்த மனுதாரர்களுக்கும் அரசுக்கும் இடையிலானவை மட்டுமே, மேலும் அவற்றுக்கான நிவாரணமும் அவர்களோடு மட்டுமே வரம்பிடப்பட்டது. "ஏற்கனவே செய்யப்பட்ட நியமனங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றோ, எந்தவொரு நபரின் பணி மூப்பையாவது (seniority) மாற்றியமைக்க வேண்டும் என்றோ, அல்லது புதிதாகத் தேர்வு, பணி நியமனம் அல்லது பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றோ எந்தவொரு அவதானிப்போ அல்லது வழிகாட்டுதலோ நாங்களால் வழங்கப்படவில்லை" என்று உறுதிப்படுத்தியது.
இந்தச் சலுகை முந்தைய தேதியிட்டுப் பொருந்தும் என்ற "தவறான அனுமானத்தின்" அடிப்படையிலேயே மத்திய அரசின் மனு அமைந்துள்ளது என்று கூறிய நீதிமன்றம் "ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகள், நியமனங்கள், பணி மூப்பு அல்லது பணி ஒதுக்கீடுகளை முந்தைய தேதியிட்டு திருத்தவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ இந்த நீதிமன்றம் உத்தரவிடவில்லை." தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஆறு மாத காலக்கெடு என்பது மனுதாரர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக மட்டுமே, அது அனைத்து ஆட்சேர்ப்பு ஆண்டுகளையும் உள்ளடக்கிய பொதுவான நடவடிக்கை அல்ல என்றும் கூறியது.
அனைத்துத் தேர்வுகள், நியமனங்கள் மற்றும் இடஒதுக்கீடு ஒதுக்கீடுகள் (roster allotments) 1993 ஓ.எம். (OM)-ன் படி, மார்ச் தீர்ப்பு விளக்கியவாறே பின்பற்றப்படும் என்று அமர்வு கூறியது. அதாவது, 2004-ஆம் ஆண்டின் விளக்கக் கடிதம் போன்ற ஒன்று ஓ.எம் (OM)-ஐ மீற முடியாது; பதவிகளின் சமநிலை நிறுவப்படாத இடங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகள் வருமானம்/சொத்து சோதனையின் கீழ் மட்டுமே சோதிக்கப்படுவார்கள் (இதில் சம்பள வருமானம் கணக்கிடப்படாது);
மேலும் பெற்றோர் வகிக்கும் பதவியின் நிலை மற்றும் பிரிவும் அவசியமானது என்பதால், சம்பள வருமானத்தை மட்டுமே ஒரு நபரை கிரிமி லேயரில் சேர்ப்பதற்கான ஒரே அளவுகோலாகக் கருத முடியாது. கிரிமி லேயர் அளவுகோல்கள் குறித்து கொள்கைகளை உருவாக்க அரசாங்கத்திற்கு முழு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ள நீதிமன்றம், பதவிகளுக்கு இடையே சமநிலையை நிறுவுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மறுத்துவிட்டது. ஏனெனில் அது "நிர்வாகம் மற்றும் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் விஷயம்" என்று சுட்டிக்காட்டியது.
source https://tamil.indianexpress.com/explained/supreme-court-obc-creamy-layer-verdict-cse-2025-allocation-12791167





