சனி, 14 அக்டோபர், 2023

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!

 

நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை ஏந்திய வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதுவரை வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குண்டு மழை பொழிந்து வந்த இஸ்ரேல் ராணுவம், தரைவழி படையெடுப்புக்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உலக நாடுகள் சில இஸ்ரேலுக்கும், சில பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே உலக நாடுகளின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான உலகக்கோப்பை போட்டியின்போது, திடீரென ஒரு இளைஞர் ‘FREE PALESTINE’ என பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகையை உயர்த்திக் காட்டினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அந்த இளைஞரையும், அவருடன் வந்த மற்றொரு நபரையும் மைதானத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய இளைஞர் முகமது ஹசன் என்பதும், இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. குடும்ப உறுப்பினர் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த முகமது ஹசனும், அவரது நண்பரும் இன்று வங்கதேசம் விளையாடும் உலகக்கோப்பை போட்டியைக் காண வந்துள்ளனர். தொடர்ந்து முகமது ஹசன் மற்றும் அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


source vhttps://news7tamil.live/young-people-who-showed-the-flag-in-support-of-palestine-excitement-in-chepauk-maidan.html