சனி, 7 நவம்பர், 2026

2 மாதங்களில் 8 முறை பேச்சுவார்த்தை; டெல்லி - வாஷிங்டன் தொடர்பு குறித்து அமெரிக்க லாபி நிறுவனம் வெளியிட்ட தகவல்

 source https://tamil.indianexpress.com/india/8-calls-between-delhi-washington-in-may-june-us-lobbying-firm-12790900


us

எழுதியவர்: திவ்யா

அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (Foreign Agents Registration Act - FARA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய ஆவணங்களின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர் ஜேசன் மில்லர் தலைமையிலான எஸ்.ஹெச்.டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்.எல்.சி (SHW Partners LLC) என்ற அமெரிக்க பரப்புரை நிறுவனம், தனது அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய - அமெரிக்க உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக நடப்பு ஆண்டின் மே-ஜூன் மாதங்களில் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பாடு செய்யப்பட்ட எட்டு தொலைபேசி அழைப்புகளை பட்டியலிட்டுள்ளது.

இந்தியா 2025 ஏப்ரலில் மில்லரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. மேலும் அந்த லாபியிங் ஒப்பந்தம் நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், ஜூன் 23 அன்று மில்லர் டிரம்ப் நிர்வாகத்தில் ஒரு சிறப்பு அரசாங்க ஊழியராக சேர்ந்ததை அடுத்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

எஃப்.ஏ.ஆர்.ஏ சட்டத்தின்படி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு முதன்மையாளர்களின் முகவர்கள் தங்கள் தொடர்பு, நடவடிக்கைகள் மற்றும் நிதி இழப்பீடு குறித்த விவரங்களைப் அவ்வப்போது பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கோருகிறது.

எஸ்.ஹெச்.டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்.எல்.சி தாக்கல் செய்த ஆவணங்களின்படி, மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ  இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன்பாக, இந்திய தரப்பிற்கும், கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் நீதம்  மற்றும் பயங்கரவாதம் மற்றும் நிதி புலனாய்வுக்கான துணைச் செயலர் ஜீன் லாங்கே  உள்ளிட்ட மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் இடையே தொலைபேசி அழைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஜூன் மாதத்தில், ரூபியோவின் வருகைக்குப் பிறகு, இந்தியத் தரப்பிற்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், கொள்கைக்கான அதிபரின் உதவியாளர் வாக்கர் பாரெட்  மற்றும் வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு அலுவலக இயக்குநர் ஸ்டீவன் சியூங் ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றன.

அந்த நிறுவனம் தனது ஆவணங்களில், மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரூபியோவுடன் நடைபெற்ற இரண்டு தூதரக நிகழ்வுகளையும் பட்டியலிட்டுள்ளது. ரூபியோ மே 23 முதல் மே 26 வரை இந்தியாவில் இருந்தார், அப்போது அவர் அமெரிக்கத் தூதரகம் நடத்திய அமெரிக்கா @250 நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அப்போது மில்லரும் புதுடெல்லியில் இருந்தார்.

வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மில்லருடன் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், மாதந்தோறும் 150,000 டாலர் வழங்குவது அடங்கியிருந்தது. ஆவணங்களின்படி, இதன் பணி வரம்பில், அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க காங்கிரஸ், மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களுக்கு முன்பாக கொள்கை சார்ந்த விஷயங்களில் மூலோபாய ஆலோசனை, தந்திரோபயத் திட்டமிடல் மற்றும் அரசாங்க உறவுகள் தொடர்பான உதவிகள் வழங்குவதும் அடங்கியிருந்தது.

டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களாக கருதப்பட்டவர்களால் வழிநடத்தப்படும் இரண்டு பெரிய பரப்புரை நிறுவனங்களை இந்தியத் தூதரகம் பணியமர்த்தியது. மற்றொரு நிறுவனம் மெர்குரி பப்ளிக் அஃபேர்ஸ் ஆகும். இந்நிறுவனத்துடன் மாதந்தோறும் 75,000 டாலர் என்ற முன்பணத் தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. டிரம்பின் இடைக்காலக் குழுவின் தகவல் தொடர்பு இயக்குநரான பிரையன் லான்சா, அதன் முக்கியக் குழுவில் இடம்பெற்றிருந்தார். தற்போது டிரம்பின் தலைமைப் பணியாளராக இருக்கும் சூசி வைல்ஸும், 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை அந்த நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட பரப்புரையாளராக இருந்தார்.

மெர்குரி நிறுவனம் தனது ஆவணங்களில், நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து டிரம்ப், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு உட்பட பலவற்றைப் பட்டியலிட்டுள்ளது.