புதன், 20 ஜூலை, 2016

தமிழகத்தில் மட்டும் மாணவர்களின் உயர்கல்விக்கான கல்விக்கடன் இதுவரை சுமார் 17000 கோடி

கல்விக்கடன் வசூலிப்பு - ரிலையன்ஸ் ஒப்பந்தம்....
தமிழகத்தில் மட்டும் மாணவர்களின் உயர்கல்விக்கான கல்விக்கடன் இதுவரை சுமார் 17000 கோடி வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
இதில், ஸ்டேட் பாங்க் வழங்கியுள்ள கல்விக்கடன் தொகையில் வராக் கடனாக 870 கோடியை மதிப்பீடு செய்து, அத்தொகையில் சுமார் 55% தள்ளுபடி செய்து, வெறும் 45% தொகையை மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டினால் போதும் என்று ஒரு வணிக ஒப்பந்தத்தை செய்துள்ளது..
அதன்படி முதலில் ஒரு அட்வான்ஸ் தொகையை செலுத்திவிட்டு, மீத தொகைக்கு கடன் பத்திர அடிப்படையில், 15 ஆண்டுகள் கழித்து ரிலையன்ஸ், ஸ்டேட் பாங்க்கிற்கு இந்த தொகையை செலுத்தினால் போதும்.
இதன் அடிப்படையில் கடன் பெற்ற மாணவ்ர்களிடம், இப்போதிருந்தே ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு தரமற்ற நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக புகார்கள் குவிந்து வருகிறது. அநேகமாக இது பல தற்கொலைகளுக்கு கண்டிப்பாக வழிவகுக்கும்.
இந்திய அரசின் செல்லப்பிள்ளையான பாரத வங்கி இது போன்று இந்தியாவில் படித்த, வேலை கிடைக்காத, வேலை கிடைத்தும் போதிய சம்பளம் கிடைக்காமல் உள்ள இளைஞர்களை அவமதிப்பதும், துன்புறுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது… இதன்படி பார்த்தால் ஒரு மாணவனிடம் ஒரு லட்ச ரூபாய் ரிலையன்ஸ் வசூல் செய்தால், நாற்பத்தி ஐயாயிரம் மட்டும் 15 வருடம் கழித்து ஸ்டேட் பாங்க்கிற்கு கட்டினால் போதுமானது.
மாணவர்களிடம் வங்கி போட்ட ஒப்பந்தங்களை மீறியும், காலக்கெடு விதித்து பல்வேறு வகைகளில், சட்ட்த்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தியும், மிரட்டியும், இதில் அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும். இந்த ஒப்பந்த்த்தை வெறும் வணிக தர்மம் என்ற முறையில் அளவிடக்கூடாது. உயர்கல்வி முடித்து, வேலை கிடைத்து, வாழ்வை துவக்க இருக்கும் இளைஞர்களை இவ்வாறாக தண்டிப்பது வருத்தமளிக்கிறது.
வணிகரீதியாக ஒரு கம்பெனிக்கு கொடுக்கும் மரியாதையை ஸ்டேட் பாங்க், வாழ்வாதரத்திற்கு போராடும் படித்த இளைஞர்களுக்கு கொடுக்க மறுக்கும் இச்செயலை என்னவென்று சொல்வது… ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்த்த்தை அரசு தலையிட்டு ரத்து செய்து, முறையான விசாரணைக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வட்டியில்லாத நீண்ட கால கடன் தவணை செலுத்தும் முறைகளை அமல் படுத்த வேண்டும்.. அல்லது கல்விக்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்..
பல்வேறு நாடுகளில் படித்துவிட்டு, வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு அரசே கணிசமான உதவித்தொகை வழங்கிவரும் நிலையில், இப்பிர்ச்சினையில் வங்கி, ஒப்பந்தம், கடன் வசூலிப்பு, வணிகம் என்கிற பொருளாதாரப் பார்வையை மட்டுமே முன்னிறுத்தி முடிவெடுப்பது அநாகரிகமான செயலாகவே அமைந்துவிடும்..
T S Arunkumar