சனி, 2 ஜூலை, 2016

காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
வீரியமிகு போராட்டத்தில் இறங்க நேரும்! மமக எச்சரிக்கை!!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
மனிதநேயம் உள்ள மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்த இளம் பெண் சுவாதி கொலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ராம்குமார், செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும்போது தற்கொலைக்கும் முயன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு பொது இடத்தில் வைத்து, காலைப் பொழுதில் வேலைக்குப் புறப்பட்ட இளம் பெண்ணை மிகக் கொடூரமாக ஒரு மனித மிருகம் கொன்றுள்ளதை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்கமுடியாது. இந்தக் கொடூரப் படுகொலையை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் கண்டித்துள்ளன.
கொலையாளியைப் பற்றிய துப்பு கிடைக்காமல், ஒருவாரகாலமாக காவல்துறை மிகத் தீவிரமான முறையில் மிகச் சிக்கலான புலனாய்வு முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, சுவாதி என்ற 'உயர் சாதிப்' பெண்ணெ பிலால் மாலிக் என்ற மிருகம் கொன்றுள்ளதாகவும், கொலையுண்டவர் பிராமணப் பெண் என்பதால் தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதாகவும், யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ், திராவிட இயக்கம், பொது உடமை இயக்கம், தலித் இயக்கம் என அனைத்துத் தரப்பையும் கொச்சைப் படுத்தியும் பதிவிட்டுள்ளார்.
= ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடிவந்திருப்பார்,
= ஊடகங்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்து இருக்கும்
= தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்
= திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள்
= காம ரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்.
என்று மிகவும் அருவறுக்கத்தக்க நடையில், ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
சுவாதியின் கொடூரக் கொலையால் தமிழகத்தில் மிகப்பெரிய கோப அலை உருவாகியுள்ள சூழலில், அதை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் கடைந்தெடுத்த கயமைத்தனத்தை ஒய்.ஜி. மகேந்திரன் செய்துள்ளார்.
கொலையாளி பிலால் மாலிக்தான் என்று இவர் எப்படிக் கண்டுபிடித்தார். ஏன் சமூக ஊடகங்களில் பரப்பினார்? தமிழகத்தின் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டிவிடும் கருத்தை வெளியிட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
வீரப்பன் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டாரா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு “வீரப்பன் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவில்லை. காட்டில்தான் உள்ளார்" என்று பதிலளித்ததற்காக குற்றவாளி இருக்கும் இடம் தெரிந்தும் அரசுக்குத் தெரியப்படுத்தாத குற்றத்திற்காக(?) தமிழக அரசு கொளத்தூர் மணி மீது வழக்குப் பதிவு செய்து 26.06.2001 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது.(வழக்கு எண் 1/2001, சேலம் க்யூ பிரிவு) மேற்கண்ட பதிலுக்காக, கொளத்தூர் மணி மீது தேசத் துரோக வழக்கும் சேர்த்து போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒய்.ஜி. மகேந்திரன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எடுக்கப்போகிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
வதந்திகள் மூலம் கலவரம் வளர்த்து, நாட்டின் அமைதியைக் குலைத்து அரசியல் லாபம் அடைவது சங்பரிவாரத்திற்கு கைவந்த கலையாகும்.
= மாட்டுக்கறி வைத்திருந்தார் என அஹ்லாக்கைக் கொன்றது.
= முஸாஃபர் நகர் முஸ்லிம்களை நிர்மூலமாக்கியது.
=கைரானாவில் இந்துக்களை முஸ்லிம்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விட்டார்கள் என்று பரப்பியது ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
சுவாதி கொலையின் மூலம் எழுந்த பொதுமக்களின் கோபத்தை, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் திருப்பிவிட கயமைத்தனமிக்க முயற்சியில் இறங்கிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நியாயம் கேட்கும் வீரிய போராட்டங்களில் இறங்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
(எம்.எச்.ஜவாஹிருல்லா)