வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஒற்றைக் கோரிக்கையும்... நந்தினியின் நான்காண்டு போராட்டமும்...!

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துகாக இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் கலந்து கொண்டு போராடினார்கள். பெண்கள் தைரியமாக போராட்டக் களத்தில் முன்நின்றனர். இந்தப் போராட்டத்தில் அதிகப்படியான கவனம் ஈர்த்தார் ஒரு பெண். 
அந்த பெண்ணின் புகைப்படமும், அவர் போராட்டத்தில் எழுப்பிய கோஷங்களும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டது. ஒரு தரப்பினர் அந்தப் பெண்ணை பாராட்டினர். இன்னொரு தரப்பினர் 'என்ன இந்த பெண்  பொது இடத்துல இப்படி நடந்துக்குறா...' என்று எதிர் கருத்துகளும் தெரிவித்தனர். அரசுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டை ஆதரித்து அந்தப் பெண் எழுப்பிய கோஷங்களால் பல்வேறு தரப்பில் இருந்து அந்தப் பெண்ணுக்கு மிரட்டல்கள் வந்தன. மேலும், யாரோ ஒரு இறந்த பெண்ணின் புகைப்படத்தைப் போட்டு,  இந்த பெண்தான்  இறந்துவிட்டார் என்ற தவறான தகவல்களும் பகிரப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் தான் நலமாக இருப்பதாக வீடியோவும் வெளியிட்டார்.
லட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருந்த இடத்தில், ஒரு பெண் எதையும் பொருட்படுத்தாமல் சத்தமாகக் கோஷங்கள் எழுப்பியது அங்கிருந்த மக்களுக்கும் சரி, சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் நமக்கும் சரி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், மது விலக்குக் கோரி பல வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நந்தினியை இந்தச் சமூகம் கண்டுக் கொள்ளாமல் போய்விட்டது. 
நந்தினி தந்தையுடன்
கடந்த 2013- ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தனி ஆளாகப் போராடி வருகிறார்.  மதுரை சட்டக் கல்லூரியில் படித்த போதே இவர் மதுவிலக்குப் போராட்டத்தை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து விஜிக்குமார் என்ற மாணவனும் தன் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கினார். நந்தினி இது போன்று பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இதில் பலவற்றில் அவருடைய தந்தையும் பங்கேற்று உள்ளார். அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடத்தியதால் பல முறை நந்தினி சிறை சென்றுள்ளார். 
ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பர்ய விளையாட்டுதான். அதற்காக பலரும் ஒன்று கூடி போராடியது, ஒற்றுமையை வெளிப்படுத்தியது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான். அதற்காக லட்சக்கணக்கானோர் மத்தியில் கோஷமிட்ட ஒரு பெண்ணை பிரபலப் படுத்தினோம். ஆனால்,  மக்கள் உயிரை பறிக்கும் கொடிய விஷம் மது. அதை ஒழிக்கப் போராடிய நந்தினிக்கு இதே போன்றதொரு பிரபலத்தை அளித்திருந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசும் சற்று சிந்தித்திருக்கக்கூடும். நம்மால் முடியாத ஒன்றை ஒரு மாணவி செய்த பட்சத்தில், அவருக்கு நம்மால் முடிந்த ஆதரவாவது கொடுத்திருக்கலாம். 
ஃபேஸ்புக், ட்விட்டரில் அடுக்கு மொழி பேசி ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணை நாம் வைரலாக்கிப் போராட்டத்தை வலிமையாக்குகிறோம். இது கலாசாரப் பிரச்னை. ஆனால் மது அதைவிடக் கொடியது. ஒரு குடும்பத்தை நேரடியாகப் பாதிக்கும். நந்தினிகளின் தனிமனிதப் போராட்டம்தான் மெரினா புரட்சி போன்ற போராட்டங்களின் தொடக்கம். தனி ஒருத்தியாக குரல் கொடுக்கும் நந்தினிகளை மறந்துவிடாதீர்கள். இணைந்து குரல் கொடுப்போம்.

http://www.vikatan.com/news/tamilnadu/79627-tamilnadu-forgot-nandhini-who-protested-for-tasmac-ban.art

Related Posts: