செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

சிசேரியன் மற்றும் அது செய்யப்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

சமீப நாட்களாக, அதிக அளவில் சிசேரியன் செய்வதாக, மகப்பேறு மருத்துவர்களின் மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்று நிலவி வருகிறது. 'சுகப்பிரசவமா..? சிசேரியனா..?  இதை யார் முடிவு செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும் முன் சிசேரியன் பற்றி சற்றே தெரிந்து கொள்வோம்.

சிசேரியன் என்றால் என்ன?


இயல்பாக, பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை பிரசவிக்க இயலாத நிலையில், மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைதான் சிசேரியன். 17ஆம் நூற்றாண்டு வரை, இறக்கும் தருவாயில் இருக்கும் தாயிடம் சேயைக் காப்பதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட்டது. சிசேரியன் செய்தால், தாய் இறந்து, சேய் மட்டுமே உயிருடன் இருக்கும், என்ற நிலையில் ஆரம்பித்து, பிறகு பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு, தற்போது அடிவயிற்றில் செய்யப்படும் தழும்பு வெளித்தெரியாத சிசேரியனாக வளர்ந்துள்ளது. 

சிசேரியன் அறுவை சிகிச்சையின் வகைகள்:

சிசேரியன் அறுவை சிகிச்சை இரண்டு வகைப்படும். 

1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).
2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).

எந்த முறையாக இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது..! 

இந்த எண்ணிக்கை கூடுவதற்கு, தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மட்டும் தான் காரணமா? அரசு மருத்துவமனைகளின் பங்கு என்ன?  இந்த சிசேரியனால் ஒரு நன்மை கூட இல்லையா என்று பார்த்தால், உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது.

சிசேரியன் பெருகுவதற்கான காரணங்கள்:

பெருகும் மக்கள் தொகை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இதில் மிக முக்கியமான மைல்கல்லாக கருதப்படுவது, தொடர்ந்து குறைந்து வரும், தாய் - சேய் இறப்பு சதவிகிதம்..! 

ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் 5. அதாவது மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகிதம் என்ற இலக்கினை, தென் மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது கேரளாவும், தமிழகமும்.!

மருத்துவத் துறையின் முக்கிய வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்த நிலை எப்படி சாத்தியமானது?

நாடெங்கிலும் பிரசவப்பேறு, மருத்துவமனைகளில் மட்டுமே நடந்திட வழிவகுக்கும் திட்டங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் 24x7 செயல்படும் மகப்பேறு மற்றும் மயக்கவியல் துறைகள், பரவலாக பயன்படுத்தப்படும் குழந்தைக்கான மின்னணு கண்காணிப்பு இயந்திரங்கள், ஆபத்தான சூழ்நிலைகளில் தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிசேரியன் சிகிச்சை, மிகவும் குறைவாக பயன்படுத்தப்படும் ஆயுதப் பிரசவங்கள், தனியார் மற்றும்
அரசு மருத்துவமனைகளில் மிக அருமையாக செயல்படுகின்ற பிறந்த குழந்தைக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவை இந்த இலக்கினை எட்ட பெரிதும் உதவியுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது..

அடுத்து.. இன்று பல குடும்பங்களில், 'Nuclear family' என்பது "நாமிருவர் நமக்கிருவர்" அல்ல; "நாமிருவர் நமக்கொருவர்" என்று மாறிவிட்டது. ஆம்! அன்று ஏழெட்டு குழந்தைகள் வரை பிரசவித்த பெண், இன்று ஒரு குழந்தையை பிரசவிக்கவே தயங்குகிறாள். அன்று கூட்டுக் குடும்பத்தில், பத்திற்கும் மேல் குழந்தைகள் இருந்த வீட்டில், பேறுகாலத்தில் தங்களுக்கு நேர்ந்த ஒரு குழந்தையின் இறப்பினை, எளிதாக ஏற்றுக்கொண்ட பெற்றோர்களால், இன்றைய சூழலில் தங்களுடைய ஒரே குழந்தையின் இறப்பு என்பது வாழ்வின் அனைத்து எதிர்காலக் கனவுகளை இழந்து நிற்பதாக மாறிவிட்டதைக் காண்கிறோம்.
 
இந்நிலையில், அவர்களது ஒரே குழந்தையை முழு நலத்துடன் அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை மற்றும் சமூக அக்கறையின் அழுத்தத்தை மகப்பேறு மருத்துவர் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார்.

 இந்த கூடுதல் பொறுப்பை மகப்பேறு மருத்துவர் ஏற்று மேற்கொள்ளும்போது, முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயன்று பார்க்கலாம் என்ற நிலை மாறி, குழந்தையின் நலனில் எள்ளளவும் குறை நேர்ந்துவிடக் கூடாது என்கின்ற நிலை முன்னிற்பதால், சிசேரியன் எண்ணிக்கையும் சற்று கூடத் தான் செய்கிறது..

சிசேரியனே சுகப்பிரசவத்தை விட சிறந்தது எனக் கருதப்படும் சில பிரத்யேக சூழ்நிலைகளை முதலில் பார்ப்போம்..

வாழ்க்கை முறை காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதன் காரணமாக மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணமாக மாறிவிட்டது. 

'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன அழுத்தம் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இவர்களுக்கு பரிந்துரைக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.

 இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, 35 வயதிற்கு மேல் கர்ப்பம் தரித்தல், சில தொற்று நோய்கள் ஆகிய மருத்துவச் சிக்கல்களினாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (புட்டப்பேறு அல்லது பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm).. குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை.. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

மேற்கூறிய அனைத்து High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது..

ஆனால், குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்ப கால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் ஜன்னி, நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில், Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது..

இவையெல்லாம் மருத்துவக் காரணங்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பெண்களின் மனநிலையும் பிரசவ முறையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறிவிட்டது..

வலியில்லாமல் பிரசவப்பேறு நடக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்ப்பார்க்கின்றனர்..
இதற்கு பெண்ணின் கணவர், பெற்றோர் மற்றும் உற்றார் என அனைவரும் ஆதரவு தருகின்றனர். அவர்களது ஒரே பெண், வலியில் மருகுவதை எந்த பெற்றோரும் விரும்புவதில்லை. பிரசவ வலியை ஏற்றுக் கொள்ளாத மனநிலை, அதிக உடற்பருமன், உடற்பயிற்சியின்மை  ஆகியவற்றை முன்னிறுத்தி, சிசேரியன் தான் எளிதான பிரசவமுறை என்று மருத்துவரை சந்திக்கும் முன்பு இவர்களே தீர்மானம் செய்து விடுகின்றனர்.

இது மட்டுமல்லாது, குழந்தையின் படிப்பு, திருமணம், எதிர்காலம் அனைத்தும் ஜாதக கட்டங்களில் அடங்கி இருப்பதாக நம்பும் சமூகம், நல்ல நாள், நல்ல நேரம், ஏற்ற நட்சத்திரம் என்று குழந்தையின் ஜாதகத்தை முன்கூட்டியே கணித்து, மருத்துவர்களை கட்டாயப் படுத்தும் நிர்ப்பந்தங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மூட நம்பிக்கைகள், இயற்கையை வென்றுவிட்ட நிலையில்,  நிமிடம் மற்றும் நொடிக்கணக்கு கூட தவறாமல் நல்ல நேரத்தில், தனது குழந்தை பிறக்க வேண்டும் என்று கைகளில் கடிகாரங்களை சுமந்து நிற்கும் பட்டதாரி கணவர்கள் அறுவை அரங்கிற்கு முன்னர் நின்று கொண்டேதான் இருக்கின்றனர்.

இதனை அரசு மருத்துவமனைகளில் செயலாக்க முடியாது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் தங்களது குழந்தையின் ஜாதகத்தைப் பெற்றுக் கொள்ள முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள். 

"On demand Caesarean” என்பதும், "On demand timed Caesarean" என்பதும் பரவலாக நடந்தாலும், அதன் பின் இருக்கும் காரணத்தை எந்த ஊடகமும் கணக்கில் கொள்வதில்லை. 

மத்திய மற்றும் மாநில அரசாங்கம்,  நாடெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்கள், 
FOGSI மற்றும் IAP போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். இதற்கு மருத்துவர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறோம். 

உதாரணத்திற்கு எனது மருத்துவமனையில், 'Primi Caesarean' எனப்படும் தலைச்சன் சிசேரியன் அளவு, 20%த்தை தாண்டியதில்லை..! ஆனாலும்,  சில சமயங்களில், சிசேரியன் பெருகுவதற்கு மகப்பேறு மருத்துவரும் ஒரு காரணி என்பதை மறுக்க முடியாது. 

பேறு காலத்தில், தாய் அல்லது சேய்க்கு உயிரிழப்போ அல்லது நிரந்தர பின் விளைவுகளோ ஏற்பட நேரிட்டால், தற்போதுள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மருத்துவர்களை வெகுவாக அச்சப்படுத்துகின்றன.

மேலும், Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் விவாதங்கள், மருத்துவரை பெரிதும் பாதிக்கின்றன. இவையனைத்தும், ‘நமக்கேன் வம்பு’ என்று மகப்பேறு மருத்துவரை பாதுகாப்பான முறையான சிசேரியனை தேர்ந்தெடுக்க வைக்கின்றன. 

மேலும், ஒரு மருத்துவரே இருவேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் போது, விரைவாக பணியை முடித்திட சிசேரியன் முறையைத் தேர்ந்தெடுப்பதும் கூட சமயங்களில் நிகழ்கிறது.
இவையனைத்தும், சிசேரியன் ஏன் அதிகரிக்கிறது என்பதை காட்டுகின்றன. 

சிசேரியன் எண்ணிக்கையைக் குறைத்திடவும், சுகப் பிரசவத்தின் எண்ணிக்கை கூடவும் மருத்துவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறது FOGSI எனப்படும் இந்திய மகப்பேறு சங்கம். கருவுற்ற காலம் தொடங்கி மகப்பேறு வரை  மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை, கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குதல். கர்ப்ப காலத்தை, அச்சத்துடன் பார்க்காமல், இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்துதல். 'Birthing classes' எனப்படும் பேறுகால விழிப்புணர்வு வகுப்புகளை அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளுதல். சுகப்பிரசவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துதல். சிசேரியன் மற்றும் ஆயுதப் பிரசவ முறைகளில் உள்ள ஆபத்துகளை எடுத்துரைத்தல். கர்ப்ப கால உடற்பயிற்சி மற்றும் யோகா வகுப்புகளை பரிந்துரைத்தல். வலியில்லா பிரசவ முறையை பரவலாக கையாளுதல். Family centred delivery எனப்படும், பிரசவத்தின் போது, கணவன் அல்லது தாய் அல்லது நெருங்கிய தோழி உடனிருத்தல் 
ஆகிய இந்த முறைகள், இயற்கையான சுகப்பிரசவத்திற்கு பெரிதும் உதவுகின்றன..

ஆம்.. பெண்மைக்கென்றே இயற்கை அளித்திருக்கும் உன்னத வரம் ‘தாய்மை’! ‘தாய்மை’ என்பது ஒவ்வொரு பெண்ணும் புதிதாக தாயாகவும், தன் மூலம் மீண்டும் ஒரு சேயாகவும் ஜனனிக்கும் உன்னத நிலை..!

தாய்மை எளிதானதல்ல என்றாலும், எப்போதும் அதை பயத்துடன் எதிர்நோக்க வேண்டிய நிலையும் அல்ல. தாய்மையை, பெருமையாக ஏற்றுக் கொண்டு, மகப்பேற்றை எளிதான இயற்கையான முறையில் செயல்படுத்திட பெண்களுடன் நாம் அனைவரும் முன்னிற்போம்..!ஏனெனில்.. 'தாயில் சிறந்ததொரு தமரில்லை..!'

Dr. Sasithra Dhamodharan,