வியாழன், 23 பிப்ரவரி, 2017

சுகாதாரத்துறையில் பல கோடி ரூபாய் ஊழல் அம்பலம்- அதிர்ச்சி ரிப்போர்ட்!





தமிழக சுகாதார துறையில் பார்வையற்ற மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்குவதில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல்:
அரசு துறைகளில் உபகரணங்கள் வாங்கும்போது பொதுவாக டெண்டர் விடப்படுவதே வழக்கம். ஆனால், சுகாதாரத்துறையில் மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் சிடி ஸ்கேன் கருவி, அல்ட்ரா கருவி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கேர்வெல் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமே வாங்க வேண்டும் என சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவரது உதவியாளர் மூலம் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வாட்ஸ்அப்
மூலம் உத்தரவு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த கேர்வெல் ஏஜென்சியிடம் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் பொழுது பொருளின் நிர்ணய விலையை விட கூடுதலாக 30 சதவீதம் வசூலிக்கப்படுவதாகவும், அந்தப்பணம் நேரிடையாக சுகாதார துறை அமைச்சரிடம் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மூக்குக் கண்ணாடி வழங்குவதில் மோசடி:
இதே போன்று பள்ளி மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு பள்ளி சிறார்கள் நலவாழ்வு திட்டத்தின் கீழ் அரசு சார்பில் மூக்குக் கண்ணாடி வழங்கப்படுகிறது. இந்த மூக்குக் கண்ணாடிகளை நாகர்கோவிலில் உள்ள லாப்டி ஏஜென்சீஸ் மூலம் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு  சுகாதார துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த நிறுவனம் வழங்கிய உபகரணங்கள் தரமற்றதாக இருந்ததால் அவர்களுக்கு சப்ளை செய்ய அனுமதி வழங்க கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறியபோதும்,  அதனை பொருட்படுத்தாமல், லாப்டி ஏஜென்சீஸ் மூலம் மட்டுமே கண்ணாடி வாங்க வேண்டும் என அமைச்சர் அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தால் வழங்கப்படும் கண்ணாடி தரமில்லாமலும், தாமதமாகவும் வழங்கப்படுவதால் ஏற்கனவே குறைபாடுள்ள மாணவர்கள் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அச்சுப்பணி மற்றும் பிரிண்டிங் வேளைகளில்..
அலுவலகத்துக்கு தேவைப்படும் ரெஜிஸ்டர் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்களும் டெண்டர் விடப்படாமல் அமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை, ராயப்பேட்டையில் ஒரு அச்சகத்தில் அச்சிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்களுக்கான நலநிதியில் மோசடி…
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலநிதியிலும் பல கோடி ரூபாய் மோசடி நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுகாதார துறையில் மருந்தாளுநர்கள், ஒப்பந்த முறையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் டேட்டா பதிவு செய்யும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலநிதி பீவாட்ஸ் ஏஜென்சீஸ் பெற்றுள்ளது. பெற்ற நிதியை தொழிலாளர்களுக்கு வழங்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.



http://kaalaimalar.net/corruption-in-tn-health-and-family-welfare-dept/