ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நாகாலாந்தில் ஹைட்ரோகார்பனின் கதை

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் மத்திய அரசுக்கும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்துக்கும் கூட பிரச்னைகள் ஏற்பட்டது. ஆனால் அந்தப் பிரச்னை வித்தியாசமானது..திட்டமே வேண்டாம் என்று நாகாலாந்து எதிர்க்கவில்லை. மத்திய அரசின் அந்தத் திட்டத்தை மாநில அரசின் திட்டம் என்று அறிவிக்க நாகாலாந்து முயற்சித்ததால் அம்மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக நாடு முழுவதும் 69 இடங்களை தெரிவு செய்து ஒப்பந்தம் வழங்குவதற்கான ஏலம் விட மத்திய அரசு 2010ஆம் ஆண்டு வாக்கில் முடிவு செய்திருந்தது. ஆனால், பெட்ரோலிய அமைச்சகத்தைப் புறக்கணித்து 2013ஆம் ஆண்டில்‌ நாகாலாந்தில் 11 இடங்களுக்கான உரிமங்களை வழங்க ஒப்பந்தப் புள்ளிகளை மாநில அரசே கோரியது. இது மத்திய அரசை மீறும் செயல் என்றும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் உள்துறைக்கு பெட்ரோலிய அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் பிரிவு இயக்குநர் ஜெனரல் சவுபே கடிதம் எழுதினார்.
இதையடுத்து, 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுக்கு நாகாலாந்து முதலமைச்சர் ஜீலியாங் எழுதிய கடிதத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஏலம் நடத்துவதன் மூலம் நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு குந்தகம் ஏற்படும் என்று கூறினார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்படி நாகாலாந்துக்கு சொந்தமான நிலம் மற்றும் இயற்கை வளத்தைப் பயன்படுத்த பேச்சுவார்த்தை மூலமே மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ஒப்பந்தப் புள்ளி மூலம் உரிமம் வழங்க மாநில அரசை அனுமதிக்க வேண்டும் என்றும் நாகாலாந்து அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அதன்பிறகு நிலைமை மாறியது. நாகாலாந்து மாநிலத்தில் ஏற்கனவே நிலவும் தீவிரவாதம், பிரிவினை வாதம் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நாகாலாந்து அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது.
இந்த நிலையில், அங்கு 2 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு ஆதாரங்களை எடுப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதத்தில் ஒப்புதல் அளித்து, பணிகளும் தொடங்கப்பட்டன.